மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை: அமைச்சர் கடம்பூர் செ. ராஜு

நீர்மின் உற்பத்தியில் ஏற்பட்டிருந்த தடங்கல் தற்போது சரியாகிவிட்ட நிலையில், தமிழகத்தில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார் அமைச்சர் கடம்பூர் செ. ராஜு. 

நீர்மின் உற்பத்தியில் ஏற்பட்டிருந்த தடங்கல் தற்போது சரியாகிவிட்ட நிலையில், தமிழகத்தில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார் அமைச்சர் கடம்பூர் செ. ராஜு. 
கோவில்பட்டியை அடுத்த அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி நடைபெற்ற அன்னதானத்தை தொடங்கி வைத்தப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
ஊழல், லஞ்சம் குறித்த ஆதாரம் இருந்தால் டி.டி.வி. தினகரன் சட்டப்பேரவையில் பேசியிருக்கலாம். எந்தவித ஆதாரமும் இல்லாமல் பேசுவது முறையல்ல. நீட் தேர்வுக்கான பல்வேறு பயிற்சிகளை அளித்து கல்வித் துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பல்வேறு போட்டித் தேர்வுகளை எளிதில் எதிர்கொள்ளும் வகையில், புதிய பாடத்திட்டம் நிகழாண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், அனைவரும் மீண்டும் அரசுப் பள்ளிகளைத் தேடி வரும் நிலை ஏற்படும்.  
தமிழகத்தில் எந்த நெருக்கடி நிலையும் இல்லை. ஜனநாயக ரீதியாக கருத்துகளைத் தெரிவிக்கவும், போராட்டம் நடத்தவும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வின் எதிர்ப்பை சமாளிக்க முடியாமல், மாநில அரசுகள் மீது பழிபோடுகின்றனர். காற்றாலை மின்உற்பத்தி எதிர்பார்த்ததைவிட அதிகமாக உள்ளது. நாளொன்றுக்கு 15,300 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. அதற்கும் அதிகமாகத்தான் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 
அதிகளவு மழை பெய்து மேட்டூர் உள்ளிட்ட அணைகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மின் உற்பத்தியில் தடங்கல் ஏற்பட்டு, தற்போது அது சரியாகிவிட்டது. எனவே, மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார் அமைச்சர். 
பேட்டியின்போது, அதிமுக நகரச் செயலர் விஜயபாண்டியன், இனாம்மணியாச்சி அதிமுக ஊராட்சி செயலர் ரமேஷ், மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறைச் செயலர் துறையூர் கணேஷ்பாண்டியன், இனாம்மணியாச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் மகேஷ்குமார், சித்தி விநாயகர் கோயில் விழா கமிட்டியைச் சேர்ந்த வெள்ளத்துரை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com