தமிழக முன்னேற்றத்தை தடுக்கும் அரசியல் கட்சிகள்: இல.கணேசன் குற்றச்சாட்டு

தமிழகம் முன்னேற்றம் அடைந்துவிடக்கூடாது என தமிழக அரசியல் கட்சிகள் தடுக்கின்றன என்றார் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் எம்பி. சாத்தான்குளம் வட்டத்தில் உள்ள குளங்கள், புத்தன்தருவை குளத்தை அளவீட


தமிழகம் முன்னேற்றம் அடைந்துவிடக்கூடாது என தமிழக அரசியல் கட்சிகள் தடுக்கின்றன என்றார் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் எம்பி.
சாத்தான்குளம் வட்டத்தில் உள்ள குளங்கள், புத்தன்தருவை குளத்தை அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சாத்தான்குளத்தில் பாஜக சார்பில் தெருமுனைப் பிரசாரக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட பாஜக துணைத் தலைவர் எஸ். செல்வராஜ் தலைமை வகித்தார். நகரத் தலைவர் அ. ராம்மோகன், நகர உள்ளாட்சி பிரிவு தலைவர் டி.எட்வர்ட் ராஜதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பார்வையாளர் ஏ. நடராஜன் வரவேற்றார்.
பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் எம்பி கலந்துகொண்டு பேசியது: டாலர் மதிப்பு உயர்ந்ததன் காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளது. இதனால் இறக்குமதி செய்யும் போது நஷ்டமும், ஏற்றுமதி செய்யும் போது லாபமும் ஏற்படுகிறது. அதிகமாக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதால் அதிக செலவாகிறது. இதனால் தமிழகத்தின் கடற்கரையோரங்களில் ஏராளமான இயற்கை எரிவாயுவும், அதன் கீழே கச்சா எண்ணெயும் இருப்பது அறிந்து, தமிழக கடற்கரை பகுதியில் எண்ணெய் கிணறு அமைக்க வேண்டும் என வாஜ்பாய் அரசு முடிவு செய்தது. ஆனால் தமிழகம் முன்னேற்றம் அடைந்துவிடக்கூடாது என தமிழக அரசியல் கட்சியினர் தடுக்கின்றனர். அவர்களுக்கு பின்னணியில் வெளிநாட்டு இயக்கங்கள் உள்ளன. மத பாகுபாடு பார்க்காமல், முன்னேற்றத்தையும் திறமையையும் மட்டுமே பார்க்கிறது பாஜக. தமிழகத்தில் திராவிட கட்சிகளின் முடிவுக்கான தொடக்கம் ஆரம்பமாகிவிட்டது. இனி எந்த தேர்தல் வந்தாலும் தாமரை சின்னத்திற்கு வாக்களிக்க மக்கள் தயாராக வேண்டும் என்றார் அவர்.
கூட்டத்தில், மாநில விவசாயப் பிரிவு துணைத் தலைவர் ஜி.கே. நாகராஜ், மாவட்டத் தலைவர் எம்.பாலாஜி, கோட்ட இணை பொறுப்பாளர் ஜி. ராஜா, மாவட்டச் செயலர் கே. வீரமணி, மாவட்ட துணைத் தலைவர்கள் பி.எம். பால்ராஜ், ஆர். பரமேஸ்வரி, கருங்குளம் ஒன்றியத் தலைவர் பெரியசாமி, நகரத் தலைவர்கள் ஆழ்வார்திருநகரி இ. இசக்கிமுத்து, ஸ்ரீவைகுண்டம் எம்.காசிராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நகரப் பொதுச் செயலர் ஆர். பேராத்துச்செல்வம் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com