பங்குனித் திருவிழா: கோவில்பட்டியில் ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 01st April 2019 02:11 AM | Last Updated : 01st April 2019 02:12 AM | அ+அ அ- |

கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயில் பங்குனித் திருவிழா குறித்த ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு கோட்டாட்சியர் அமுதா தலைமை வகித்தார். கோவில்பட்டி வட்டாட்சியர் பரமசிவன், டி.எஸ்.பி. ஜெபராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயில் பங்குனித் திருவிழா ஏப்.5 இல் தொடங்கி 15 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதையொட்டி நடைபெறும் தேரோட்டம், தீர்த்தவாரி, தெப்பத் திருவிழாவின்போது, மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
திருவிழா நாள்களில் கோயில் அருகே திருமண மண்டபத்தில் மருத்துவ முகாம், நடமாடும் மருத்துவக் குழு அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்;
எட்டயபுரம் சாலை, தெப்பக்குளம் அருகே மின்மாற்றி அருகில் மின்வாரியப் பணியாளர்கள் தயார் நிலையில் இருப்பதுடன், தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும். தேர்தல் விதிகள் பின்பற்றப்படுகிறதா என்பதை தேர்தல் பறக்கும் படையினர் கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டன.
துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவராமகிருஷ்ணன், அரசுப் போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் ரமேசன், மோட்டார் வாகன ஆய்வாளர் நாகூர்கனி, அரசு மருத்துவமனை மருத்துவ அதிகாரி பூவேஸ்வரி, கோயில் செயல் அலுவலர் பாலசுப்பிரமணியராஜன், கிராம நிர்வாக அலுவலர் அபிராமி சுந்தரி, வருவாய் ஆய்வாளர் மோகன், கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுதீசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.