கோவில்பட்டி, விளாத்திகுளம் பகுதியில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்
By DIN | Published On : 04th April 2019 08:29 AM | Last Updated : 04th April 2019 08:29 AM | அ+அ அ- |

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை கோவில்பட்டி, விளாத்திகுளம் பகுதிகளில் வாக்குசேகரித்தார்.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் கனிமொழியை ஆதரித்து, நடிகர் உதயநிதி ஸ்டாலின் கோவில்பட்டியில் திறந்த வேனில் நின்றபடி வாக்கு சேகரித்தார்.
அப்போது வேட்பாளர் கனிமொழி பேசியது: ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் தீப்பெட்டித் தொழில், கடலை மிட்டாய் உள்ளிட்ட சிறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தொழிலாளர்களும் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். பட்டாசுத் தொழிற்சாலை மிகப்பெரிய அளவில் பாதிப்படைந்துள்ளது. அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் நலத் திட்டங்களை செயல்படுத்த அனைவரும் திமுகவை ஆதரிக்க வேண்டும் என்றார் அவர்.
பிரசாரத்தில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. எல்.ராதாகிருஷ்ணன், மேற்கு ஒன்றிய திமுக செயலர் பீக்கிலிபட்டி வீ.முருகேசன், நகரச் செயலர் கருணாநிதி, மதிமுக மாவட்ட இளைஞரணிச் செயலர் விநாயகா ரமேஷ், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் திருப்பதிராஜா, காமராஜ், உமாசங்கர், பிரேம்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பரமராஜ், சரோஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விளாத்திகுளம்: தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி, விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் வசந்தம் ஜெயக்குமார் ஆகியோரை ஆதரித்து, சூரன்குடி, விளாத்திகுளம், பசுவந்தனை ஆகிய இடங்களில் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியது: திமுக வேட்பாளர் கனிமொழி, இப்பகுதியில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தி, கடந்த 2 மாதங்களில் 2 ஆயிரம் பேருக்கு வேலை ஏற்படுத்தி கொடுத்துவிட்டு மக்களை சந்தித்து வாக்கு கேட்கிறார். எனவே தூத்துக்குடி தொகுதி மக்களுக்கு நல்ல பல திட்டங்களை நிறைவேற்றித் தர மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தூத்துக்குடி தொகுதி வேட்பாளர் கனிமொழிக்கும், விளாத்திகுளம் பேரவைத் தொகுதி வேட்பாளர் வசந்தம் ஜெயக்குமாருக்கும் வாக்குகளை அளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார் அவர்.