தூத்துக்குடி மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களில் குருத்தோலை பவனி

தூத்துக்குடி மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குருத்தோலை பவனியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தூத்துக்குடி மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குருத்தோலை பவனியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் கிறிஸ்தவர்கள் 40 நாள்கள் தவக்காலம் கடைப்பிடித்து வருகின்றனர். நிகழாண்டு, கடந்த மார்ச் 6 ஆம் தேதி தவக்காலம் தொடங்கியது. தவக்காலத்தின் நிறைவு வாரமான ஞாயிற்றுக்கிழமை அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் குருத்தோலை பவனி நடைபெற்றது. தூத்துக்குடி பனிமயமாதா பேராலயத்தில் பங்குத்தந்தை லெரின் டி ரோஸ் தலைமையில் நடைபெற்ற பவனியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சின்னக்கோயில் என அழைக்கப்படும் திருஇருதய பேராலயத்தில் தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் நடைபெற்ற குருத்தோலை பவனியில் பங்குத்தந்தைகள், குருவானவர்கள், இறைமக்கள் கலந்துகொண்டனர்.
தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தில் புனித அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை பிராங்ளின் தலைமையில் அலங்காரசுவாமி கெபி முன்பிருந்து தொடங்கிய குருத்தோலை பவனி ஆலயத்தில் நிறைவடைந்தது.  புனிதவாரத்தையொட்டி ஏப். 18 ஆம் தேதி பெரிய வியாழன் நிகழ்ச்சியும், 19 ஆம் தேதி புனித வெள்ளியும், 21 ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகையும் கடைப்பிடிக்கப் படுகிறது. 
கோவில்பட்டி: புனித சூசையப்பர் ஆலயம், தூய பவுலின் ஆலயத்தில் குருத்தோலை பவனி நடைபெற்றது. இதில், ஆலய சேகரகுரு ஏசுவடியான்துரைசாமி, கெளரவகுரு இம்மானுவேல், இறைமக்கள் கலந்துகொண்டனர். பவனியில் கையில் குருத்தோலையை ஏந்தியவாறு பாடல்களை பாடிச் சென்றனர்.
ஆறுமுகனேரி: ஆறுமுகனேரி மடத்துவிளை புனித சவேரியார் ஆலயம், ராஜமன்னியபுரம் புனித அந்தோணியார் ஆலயத்தில் குருத்தோலை பவனி நடைபெற்றது. பங்குத்தந்தை ஸ்டார்வின் அடிகளார் திருப்பலிலி நடத்தினார். சவேரியார் தெருவில் இருந்து புறப்பட்ட பவனி குரூஸ்நகர், மடத்துவிளை வழியாக ஆலயம் வந்தடைந்தது.
காயல்பட்டினம் கொம்புத்துறை புனித முடியப்பர் ஆலயத்தில் சிறப்பு திருப்பலிலியை பங்குத்தந்தை வில்ஸ்டன் அடிகளார், சிங்கித்துறை செல்வமாதா ஆலயத்தில் பங்குத்தந்தை சில்வர்ஸ்டர் அடிகளார் ஆகியோர் நடத்தினர்.  ஆறுமுகனேரியில் சிஎஸ்ஐ தேவாலயங்களிலும்  குருத்தோலை ஞாயிறு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.
சாத்தான்குளம்: சாத்தான்குளம் தூய ஸ்தேவான் ஆலயத்தில் குருவானவர் பாஸ்கர் அல்பர்ட்ராஜன் தலைமையில் சபை மக்கள் குருத்தோலையை ஏந்தி ஓசன்னா கீதம் பாடியவாறு ஊர்வலமாக வந்தனர். ஆலயம் முன்பிருந்து தொடங்கிய பவனி ஜெபஞானபுரம், தச்சமொழி, மாணிக்கவாசகபுரம், ஆசீர்வாதபுரம் , பெருமாள்கோயில் தெரு வழியாக ஆலயத்தில் முடிந்தது. இதையடுத்து, சிறப்பு வழிபாடு ஆராதனை நடைபெற்றது.
நாசரேத் வட்டாரத்தில் வெள்ளரிக்காயூரணி சகல பரிசுத்தவான்களின் ஆலயத்தில் சபை ஊழியர் ஜாண் வில்சன் தலைமையில் நடைபெற்ற பவனியில் பரிபாலனக் கமிட்டித் தலைவர் சிம்சோன், இந்திய மிஷனெரி சங்க கெளரவ ஊழியர் தர்மராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மூக்குப்பீறி தூய மாற்கு ஆலயத்தில் சேகரகுரு ஜெரேமியா தலைமை வகித்தார். பிரிபாலனக் கமிட்டி தலைவர் சாமுவேல் ஆகியோர் முன்னிலை வகித்தார். பிரகாசபுரம் பரிசுத்த பரலோக அன்னை தேவாலயத்தில் பங்குத்தந்தை தோமாஸ் தலைமையிலும்,  பிரகாசபுரம் தூய திரித்துவ ஆலயத்தில் சேகரகுரு அல்பர்ட் ஜெயசிங் தாமஸ் தலைமையிலும், நாசரேத் தூய யோவான்  பேராலயத்தில் தலைமைப்பாதிரியார் எட்வின் ஜெபராஜ் தலைமையிலும் குருத்தோலை பவனி நடைபெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com