பகல் நேரத்தில் வெயிலில் செல்வதை தவிர்க்க ஆட்சியர் வேண்டுகோள்

தூத்துக்குடி மாவட்டத்தில் கடும் வெப்பம் நிலவுவதால் நண்பகல் 12 முதல் பிற்பகல் 3 மணி வரை பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வலியுறுத்தியுள்ளார்.


தூத்துக்குடி மாவட்டத்தில் கடும் வெப்பம் நிலவுவதால் நண்பகல் 12 முதல் பிற்பகல் 3 மணி வரை பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோடை காலங்களில் வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் வகையில் பொது சுகாதாரத்துறையின் மூலம் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தங்களை பாதுகாத்திட பொதுமக்கள் அவசியமான காரணங்களின்றி நண்பகல் 12 முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். 
வெயிலில் வேலை செய்வோர் அடிக்கடி தண்ணீர் பருகுவதுடன், தலையில் துண்டு கட்டிக் கொள்ள வேண்டும். தளர்வாக பருத்தி உடைகளை அணிய வேண்டும். வெப்பம் அதிகமுள்ள திறந்தவெளியில் வேலை செய்யும்போது களைப்பு, தலைவலி, தலைச்சுற்றல் போன்றவை தென்பட்டால் உடனடியாக குளிர்ந்த இடங்களுக்கு செல்ல வேண்டும். 
தேநீர், காபி போன்ற சூடான பானங்கள் அருந்துவதை தவிர்க்க வேண்டும். வெப்பத்தின் தாக்கத்தை குறைக்க உப்பு கலந்த எலுமிச்சை சாறு, உப்புக்கரைசல் ஆகியவற்றை பருக வேண்டும். வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்களில் குழந்தை கள், செல்லப் பிராணிகளை விட்டுச் செல்லக் கூடாது. வெப்பத்தால் வியர்வை அதிகரிக்கும்போது உப்புச்சத்து, நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்படும். ஆகவே, தாகம் இல்லாவிடிலும் போதிய அளவு தண்ணீர் பருக வேண்டும். வெளியே செல்லும்போது பாட்டிலில் குடிநீர் எடுத்து செல்ல வேண்டும்.
கோடை வெப்பத்தால் பொதுஇடங்களில் யாரேனும் மயக்கம் அடைந்தால் உடனடியாக 108 அவசர சிகிச்சை வாகனத்துக்கு தகவல் அளித்து காப்பாற்ற வேண்டும். மயக்கமுற்ற நபரை ஒரு பக்கமாக சாய்த்து நல்ல காற்றோட்டமான நிழல் பகுதியில் படுத்தவாறு வைக்க வேண்டும். அவசர சிகிச்சை வாகனத்திற்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டால் பாதிக்கப்பட்டவரை சம தரையில் படுக்க வைத்து கால் மற்றும் இடுப்பு ஆகியவற்றை உயர்த்தி பிடிக்க வேண்டும். 
ஆடைகளை தளர்த்தி ஐஸ் கட்டியால் ஒத்தடம் கொடுக்கலாம் அல்லது குளிர்ந்த நீரை உடல் முழுவதும் தொடர்ந்து தெளிக்க வேண்டும். கோடையில் அதிகளவில் மோர், மோர் கலந்த அரிசிக் கஞ்சி, இளநீர், உப்பு கலந்த எலுமிச்சை பழச்சாறு,  உப்புக்கரைசல் போன்றவற்றை பருக வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com