தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் தயார் நிலையில் 1,595 வாக்குச்சாவடிகள்: இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடக்கம்

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் வியாழக்கிழமை (ஏப். 18) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கவுள்ள நிலையில்,

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் வியாழக்கிழமை (ஏப். 18) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கவுள்ள நிலையில், தொகுதியில் உள்ள 1,595 வாக்குச்சாவடிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி, பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன், அமமுக வேட்பாளர் ம. புவனேஸ்வரன் உள்பட 37 பேர் போட்டியிடுகின்றனர். இதேபோல், விளாத்திகுளம் பேரவைத் தொகுதியில் 14 பேர் போட்டியிடுகின்றனர்.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் 1,595 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடியில் பணிபுரியும் அலுவலர்களுக்கான பணி நியமன ஆணை சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக புதன்கிழமை வழங்கப்பட்டது.
ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பணியில் இருக்கும் வாக்குச்சாவடி தலைமை அலுவலர், நிலை அலுவலர்கள் 3 பேர் ஆகியோரின் புகைப்படம், முகவரி, பணிபுரியும் இடம், செல்லிடப்பேசி எண் ஆகியவை இடம்பெற்ற ஆணை தனித்தனியே வழங்கப்பட்டது.
பணிநியமன ஆணையை பெற்றவர்கள் அதில் உள்ள மற்ற அலுவலர்களை தொடர்பு கொண்டு வாக்குச் சாவடிக்கு செல்லலாம் என அறிவிக்கப்பட்டது.
மேலும், காமராஜ் கல்லூரியிலிருந்து தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் செல்வதற்கு பேருந்து வசதியும் செய்யப்பட்டிருந்தது.
இதற்கிடையே, வாக்குச்சாவடிகளுக்குத் தேவையான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம், எழுது பொருள்கள் உள்ளிட்டவை பலத்த பாதுகாப்புடன் தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்து மாலை 6 மணிக்குள் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்தப் பொருள்களை வாக்குச்சாவடி அலுவலர்கள் பெற்றுக் கொண்டனர்.
பின்னர், வாக்குச்சாவடிகளை தயார் செய்யும் பணி நடைபெற்றது. இரவு 9 மணிக்குள் அனைத்து வாக்குச் சாவடிகளும் தயார் நிலைக்கு வந்தன.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் உள்ள 1,595 வாக்குச்சாவடிகளில் 236 பதற்றமானவை என்பதாலும், 3 மிகவும் பதற்றமானவை என்பதாலும் அங்கு உள்ளூர் போலீஸாருடன் மத்திய துணை ராணுவத்தினர் சிலரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 
மேலும், 700 வாக்குச்சாவடிகளில் நடைபெறும் வாக்குப்பதிவு நேரடியாக கணினியில் உள்ள வெப் கேமரா மூலம் ஆன்லைனில் பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மாற்றுத்திறனாளிகள் சென்று வர சாய்வுதள வசதி செய்யப்பட்டுள்ளது.
காது கேளாதோர், கண் பார்வையற்றோர் வாக்களிக்கவும் சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க செல்ல ஏதுவாக வாகன வசதியும் செய்யப்பட்டுள்ளது.
விளாத்திகுளம் தொகுதியில் 4 இயந்திரம்: தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் 3 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.  இடைத்தேர்தல் நடைபெறும் விளாத்திகுளம் பேரவைத் தொகுதியில் 4 வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அந்த தொகுதிக்குள்பட்ட 259 வாக்குச்சாவடிகளில் 5 தேர்தல் நிலை அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
மக்களவைத் தேர்தல் மற்றும் விளாத்திகுளம் பேரவைத் தேர்தலுக்காக, மாவட்டத்தில் மொத்தம் 6,084 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், 2,652 வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 2,957 வாக்குப்பதிவு ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களும் பயன்படுத்தப்படுகின்றன. 
வாக்குப் பதிவு வியாழக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கும் நிலையில், வேட்பாளர்களின் முகவர்கள் காலை 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்குள் வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
அவர்களது முன்னிலையில் மாதிரி வாக்குப் பதிவு நடத்தப்பட்டு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளிக்கப்படுகிறது. 
இதைத் தொடர்ந்து வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. வாக்குப் பதிவு முடிவடைந்தபிறகு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை வாக்கு எண்ணும் மையத்துக்கு எடுத்துச் செல்லும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவில்பட்டியில்...

கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 281 வாக்குச் சாவடிகளிலும் வியாழக்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்க உள்ள நிலையில், அனைத்து வாக்குச்சாவடிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
வாக்குச் சாவடிகளில் பணிபுரியும் அலுவலர்களுக்கான பணி நியமன ஆணை புதன்கிழமை வழங்கப்பட்டது. இதற்கிடையே வாக்குச் சாவடிகளுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், வாக்கு ஒப்புகைச் சீட்டு கருவிகள்,  எழுதுபொருள்கள் உள்ளிட்டவை கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லப்பட்டன. 22 வாகனங்களில் இவை அனுப்பி வைக்கப்பட்டன. உதவித் தேர்தல் அதிகாரியும், கோட்டாட்சியருமான அமுதா, வட்டாட்சியர்கள் பரமசிவன்(கோவில்பட்டி),  லிங்கராஜ் (கயத்தாறு) ஆகியோர் முன்னிலையில் இப்பணி நடைபெற்றது. இப்பணியை தேர்தல் பொதுப் பார்வையாளர் துக்கி சயாம் பெய்க், தேர்தல் ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் தங்கசீலன் ஆகியோர் பார்வையிட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com