விளாத்திகுளம் ஸ்ரீமீனாட்சிசுந்தரேஸ்வரர் கோயில் சித்திரைத் தேரோட்டம்
By DIN | Published On : 18th April 2019 06:53 AM | Last Updated : 18th April 2019 06:53 AM | அ+அ அ- |

விளாத்திகுளம் அருள்மிகு ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த 8ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் மண்டகப்படிதாரர்கள் சார்பில் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள், அன்னதானம், இரவு சப்பரத்தில் சுவாமி அம்பாள் வீதி உலா, ஆன்மிக கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தை முன்னிட்டு, புதன்கிழமை காலையில் உற்சவர், சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து சுவாமி, அம்பாள் தேருக்கு எழுந்தருளினர்.
மாலை 4 மணிக்கு காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், கோயில் நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணிய ராஜா ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். பக்தர்களின் "ஓம் நமசிவாய' கோஷத்தோடு நான்கு ரதவீதிகளில் தேர் வலம் வந்து மாலை 6.30 மணிக்கு தேர் நிலையம் வந்து சேர்ந்தது. விழாவில், விளாத்திகுளம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினர் மற்றும் திருப்பணி குழுவினர் செய்திருந்தனர்.