திமுகவினர் கோஷ்டி மோதல்: ஒன்றியச் செயலர் காயம்: வீடு, கார் கண்ணாடிகள் உடைப்பு
By DIN | Published On : 23rd April 2019 10:14 AM | Last Updated : 23rd April 2019 10:14 AM | அ+அ அ- |

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியில் திமுகவைச் சேர்ந்த இருதரப்பினர் மோதிக்கொண்டதில், ஒன்றியச் செயலர் பலத்த காயமடைந்தார். இந்த மோதலின்போது வீடு, கார்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.
உடன்குடி திமுக ஒன்றியச் செயலராக இருப்பவர் பெ. பாலசிங். இவர், ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியளவில் உடன்குடி பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒருதரப்பினர் பாலசிங்கை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த பாலசிங், திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவர், செட்டியாபத்து திமுக ஊராட்சி செயலர் அ. சிவநாதன், உடன்குடி எம்.என். நகரைச் சேர்ந்த திமுக மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் ரா. பிரபாகர் ஆகியோர் தன்னை தாக்கியதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பாலசிங் தாக்கப்பட்டதையடுத்து, அங்கு வந்த மற்றொரு தரப்பினர் செட்டியாபத்தில் அ. சிவநாதன் வீட்டின் கண்ணாடிகள், வீடு முன் நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடிகளை உடைத்தனராம். இதேபோல, உடன்குடி எம்.என். நகரில் உள்ள பிரபாகரின் வீட்டு கண்ணாடி, கார் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டன.
இதுகுறித்து பிரபாகர் மனைவி சீதாபதி, சிவநாதனின் சகோதரர் அ. ரெங்கநாதன் ஆகியோர் குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், தங்கள் வீடு, கார் கண்ணாடிகளை பாலசிங், நகரச் செயலர் ஜான்பாஸ்கர், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் ரவிராஜா மற்றும் 10 பேர் கொண்ட கும்பல் அடித்து நொறுக்கியதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.