பள்ளக்குறிச்சி அம்பாள்குளத்தில் மணல் திருட்டு; 7 லாரிகள் பறிமுதல்
By DIN | Published On : 27th April 2019 08:04 AM | Last Updated : 27th April 2019 08:04 AM | அ+அ அ- |

சாத்தான்குளம் அருகேயுள்ள பள்ளக்குறிச்சி அம்பாள்குளத்தில் விதிமுறையை மீறி மணல் அள்ளியதாக ஒரு பொக்லைன், 7 லாரிகளை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர்.
சாத்தான்குளம் வட்டத்தில் குளங்களை தூர்வாரும் பொருட்டும், விவசாய நிலங்களுக்கு குளத்து மண்ணை பயன்படுத்தலாம் என தனியாருக்கு அனுமதி அளிக்கப்பட்டு குளங்களில் மணல் அள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், அம்பாள் குளத்துக்கு உரிமம் பெற்றவர், அதன் விதிமுறைக்கு மாறாக கூடுதல் மணல் அள்ளி அரசுக்கு வருவாய் இழப்பீடு செய்வதாக திரைப்பட நடிகை கொம்மடிக்கோட்டை து. எமி, திருச்செந்தூர் கோட்டாட்சியர் மற்றும் ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார்.
இந்நிலையில் திருச்செந்தூர் கோட்டாட்சியர் வனபிரியா தலைமையில் வருவாய்துறையினர் அந்தக் குளத்தில் வியாழக்கிழமை சோதனை நடத்தினர். அதில், குளத்தில் 3அடிக்கு மணல் அள்ளுவதற்கு பதில் 20 அடிக்கு மேல் மணல் அள்ளியிருப்பது தெரியவந்ததாம்.
இதையடுத்து, குளத்தில் மணல் அள்ளுவதற்கு பயன்படுத்தப்பட்ட ஒரு பொக்லைன் இயந்திரம் மற்றும் 7 லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பொக்லைன் இயந்திரம் குளத்திலும், 4 லாரிகள் மெஞ்ஞானபுரம் காவல் நிலையத்திலும், 3 லாரிகள் தட்டார்மடம் காவல் நிலையத்திலும் நிறுத்தப்பட்டுள்ளன.