ஆக.22-இல் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா
By DIN | Published On : 04th August 2019 12:53 AM | Last Updated : 04th August 2019 12:53 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 27ஆவது பட்டமளிப்பு விழா 22-ஆம் தேதி நடைபெறுகிறது.
இது தொடர்பாக பல்கலைக்கழகப் பதிவாளர் சந்தோஷ் பாபு வெளியிட்ட செய்திக் குறிப்பு: பல்வேறு பட்ட படிப்புகளை, பல்கலைக்கழக துறைகள் மூலமாகவும், கல்லூரிகள், தொலைநெறி இயக்கம் மூலமாகவும் பயின்று 2018 நவம்பர், டிசம்பர், 2019 ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்ற தேர்வுகள், 2019-இல் சிறப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மற்றும் முனைவர் பட்டம் பெறுபவர்களுக்கு பல்கலைக்கழகம் சார்பில் பட்டமளிப்பு சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. முனைவர் பட்டம் பெறுபவர்களும், பல்வேறு படிப்புகளில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் பெறும் மாணவர்களும், ஆக. 22-ஆம் தேதி நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு பட்டம் பெற தகுதி பெற்றவர்கள்.
முனைவர் பட்ட ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பவர்கள் வரும் 14-ஆம் தேதி வரை நடைபெறும் வாய்மொழித் தேர்வில் வெற்றி பெற்றால், பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க பல்கலைக்கழக இணையதளத்தின் மூலம் ரூ.1000 செலுத்தி விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த பிறகு அது தொடர்பான படிவத்தை பதிவிறக்கம் செய்து அதன் நகலுடன் தற்காலிகச்சான்று மற்றும் புகைப்படத்தை இணைத்து தேர்வாணையர், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி-12 என்ற முகவரிக்கு வரும் 16-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
தொலைநெறி இயக்கம் மூலம் பயின்று தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...