தூத்துக்குடி: மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அந்நாட்டு போலீஸாரிடம் ஒப்படைப்பு
By DIN | Published On : 04th August 2019 09:38 AM | Last Updated : 04th August 2019 09:38 AM | அ+அ அ- |

தூத்துக்குடியில் மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது அதீப்பிடம் விசாரணை மேற்கொண்ட இந்திய குடியேற்றப் பிரிவு அதிகாரிகள், விசாரணைக்குப் பிறகு அவரை அந்நாட்டு போலீஸாரிடம் சனிக்கிழமை அதிகாலை ஒப்படைத்தனர்.
மாலத்தீவில் இருந்து சிறிய வகை சரக்கு கப்பலில் தப்பி வந்த அந்நாட்டு முன்னாள் துணை அதிபர் அகமது அதீப், தூத்துக்குடியில் கடந்த 1 -ஆம் தேதி பிடிபட்டார். அவரிடம் மத்திய, மாநில உளவுத் துறை அதிகாரிகள், மத்திய குடியேற்றப் பிரிவு மற்றும் வெளியுறவுத் துறை அதிகாரிகள் பல்வேறு கட்ட விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, அகமது அதீப்பிடம் போலி பாஸ்போர்ட் இருந்தது கண்டறியப்பட்டது. மாலத்தீவு முன்னாள் அதிபரை கொல்ல முயன்றது, மே தின விழாவில் துப்பாக்கியுடன் சென்றது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் அகமது அதீப் மீது உள்ளதாகக் கூறப்படுகிறது.
அகமது அதீப் பிடிபட்டது தொடர்பாக, மாலத்தீவு அரசுக்கும், ராணுவத்துக்கும் முறையான தகவலை வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்தது. இதைத்தொடர்ந்து, மாலத்தீவு அரசு உயர் அதிகாரிகள் குழு, ராணுவத்தினர் மற்றும் போலீஸார் தனி கப்பல் மூலம் தூத்துக்குடிக்கு வெள்ளிக்கிழமை இரவு வந்தனர்.
இதையடுத்து, மாலத்தீவு போலீஸாரிடம் அகமது அதீப் சனிக்கிழமை அதிகாலையில் ஒப்படைக்கப்பட்டார். பிறகு, அகமது அதீப் தப்பி வந்த சிறிய வகை கப்பலிலேயே அவர் மீண்டும் மாலத்தீவு அழைத்துச் செல்லப்பட்டார்.
இதற்கிடையே, அகமது அதீப் தப்ப உதவியது தொடர்பாக, விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில், கப்பலில் பணிபுரிந்த தமிழகத்தைச் சேர்ந்த போஸ்கோ நிக்கோலஸ் பிரட்டோ உள்ளிட்ட 9 பேரையும் மாலத்தீவு போலீஸார் அழைத்துச்
சென்றனர்.