விபத்தில் காயமடைந்த கல்லூரி மாணவர் பலி
By DIN | Published On : 04th August 2019 12:56 AM | Last Updated : 04th August 2019 12:56 AM | அ+அ அ- |

கோவில்பட்டி புறவழிச்சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்த கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் காடனேரி வடக்குத் தெருவைச் சேர்ந்த கண்ணன் மகன் கவியரசு(18). திருமங்கலம் அரசுக் கல்லூரியில் பி.ஏ. தமிழ் 2ஆம் ஆண்டு படித்து வந்த இவர், வெள்ளிக்கிழமை பைக்கில் திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கோவில்பட்டி புறவழிச்சாலை பெருமாள் கோயில் அருகே சென்று கொண்டிருந்தாராம். அப்போது, முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் பின்பகுதியில் கவியரசு ஓட்டிச் சென்ற பைக் மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த அவரை, கிழக்கு காவல் நிலைய போலீஸார் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின், தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநர் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த த.அன்னசாகிப்பவாவிடம் (44) விசாரித்து வருகின்றனர்.