தூத்துக்குடி பனிமய மாதா  பேராலயத்தில் இன்று திருவுருவ பவனி

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தில் அன்னையின் திருவுருவ பவனி திங்கள்கிழமை (ஆக. 5) இரவு நடைபெறுகிறது.

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தில் அன்னையின் திருவுருவ பவனி திங்கள்கிழமை (ஆக. 5) இரவு நடைபெறுகிறது. இதையொட்டி, ஞாயிற்றுக்கிழமை இரவு ஆலய வளாகத்தில் நடைபெற்ற பவனியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
புகழ் பெற்ற தூத்துக்குடி பனிமய மாதா பேராலய 437 ஆம் ஆண்டு திருவிழா ஜூலை மாதம் 26 இல் கொடியேற்றத்துடன்  தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆலயத்தில் தினமும் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
10 ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலையில் தூய யூதா ததேயு ஆலய பங்கு இறைமக்கள், கப்புச்சின் துறவியர், திரு இருதயசபை அருள்சகோதரர்கள், தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்ற திருப்பலி நடைபெற்றது. 
பனிமய மாதா பேராலயப் பங்கு இறைமக்களுக்கான திருப்பலி,  நோயுற்றோருக்கான சிறப்புத் திருப்பலி, புதுக்கோட்டை, அந்தோனியார்புரம் பங்கு இறைமக்கள் பங்கேற்ற திருப்பலி, நண்பகலில் ரீத்தம்மாள்புரம் பங்கு இறைமக்களுக்கான திருப்பலி, மாலையில் தூத்துக்குடி மறைமாவட்ட மக்களுக்கான திருப்பலி ஆகியன நடைபெற்றது.
இரவில் மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் பெருவிழா மாலை ஆராதனை, ஆலய வளாகத்தில் அன்னையின் திருவுருவ பவனி ஆகியவை நடைபெற்றது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருவிழாவின் 11 ஆம் நாளான திங்கள்கிழமை காலை 7.30 மணிக்கு ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் பெருவிழா கூட்டுத் திருப்பலி, 10 மணிக்கு மறைமாவட்ட முதன்மை குரு ரோலிங்டன் தலைமையில் திருப்பலி, நண்பகல் 12 மணிக்கு திருச்சி ஆயர் அந்தோணி டிவோட்டா தலைமையில் சிறப்பு நன்றி திருப்பலி ஆகியவை நடைபெறுகிறது.
சிகர நிகழ்ச்சியான நகர வீதிகளில் அன்னையின் திருவுருவ பவனி இரவு 7 மணிக்கு நடைபெறும். பவனியை மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தொடங்கி வைக்கிறார். இதில், தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், இலங்கை, பிரான்ஸ், மலேசியா உள்ளிட்ட வெளிநாட்டினரும் லட்சக்கணக்கில் பங்கேற்கின்றனர். 
இதையொட்டி தூத்துக்குடி மாவட்டத்துக்கு திங்கள்கிழமை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருவிழாவை முன்னிட்டு 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.     

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com