பாசனக் குளங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற விவசாயிகள் கோரிக்கை
By DIN | Published On : 09th August 2019 07:16 AM | Last Updated : 09th August 2019 07:16 AM | அ+அ அ- |

சாத்தான்குளம் அருகே பாசனக் குளங்களில் அதிகரித்துள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் ஊராட்சியில் பெருமாள்குளத்தில் கீழக்குளம், மேலக்குளம், பாப்பான்குளம் ஆகிய மூன்று குளங்கள் உள்ளன. இக்குளங்கள் 120 ஏக்கரில் அமைந்துள்ளன. இந்தக் குளத்தின் மூலம் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.
இக்குளங்களில் தனி நபர் சிலர் ஆக்கிரமிப்பு செய்திருப்பதால் குளங்களின் பெரும் பகுதியை காணவில்லை. அதிகரித்து வரும் ஆக்கிரமிப்புகளால் குளத்தின் அடையாளம் மாறி வருகிறது. கீழக்குளத்தில் பெருமாள்குளத்தைச் சேர்ந்த சிலர் ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் எடுத்து வருகின்றனர்.
குளங்களில் அதிகரித்துள்ள ஆக்கிரமிப்புகளால் நீர் வழித்தடங்கள் அடைக்கப்பட்டு இக்குளங்களுக்கு நீர்வரத்து வருவது குறைந்துவிட்டது. குளத்துக்கு நீர் வரும் மணிமுத்தாறு கால்வாய் தூர் வாராததால் பாசனம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே, கீழக்குளம், மேலக்குளம், பாப்பான்குளம் ஆகிய குளங்களிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், முன்னாள் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் முத்தையா உள்ளிட்டோர் முதல்வர், ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு மனு அனுப்பினர்.