சுடச்சுட

  

  சுதந்திர தினம்: தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

  By DIN  |   Published on : 15th August 2019 06:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சுதந்திர தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
  நாட்டின் 73ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில், தருவை மைதானத்தில் வியாழக்கிழமை (ஆக.15) காலை 9.05 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கலந்துகொண்டு தேசியக் கொடியை ஏற்றிவைத்து பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்குகிறார். மேலும், காவல்துறை அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக் கொள்கிறார்.
  இந்நிலையில், காவல்துறை சார்பில் தருவை மைதானத்தில் அணிவகுப்பு ஒத்திகை கூடுதல் கண்காணிப்பாளர் பொன்ராமு மேற்பார்வையிலும், துணைக் கண்காணிப்பாளர் ஆர். பிரகாஷ் முன்னிலையிலும் புதன்கிழமை நடைபெற்றது. ஒத்திகையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினார்.
  ஒத்திகையில், காவல் துறை, தீயணைப்புத் துறை, ஊர்க்காவல் படை, தேசிய மாணவர் படை (ராணுவம்) மற்றும் தேசிய மாணவர் படை (கப்பற்படை), சாரணர்படை ஆகியவற்றைச் சேர்ந்தோர் கலந்துகொண்டனர்.
  மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. திருச்செந்தூர் கோயில் உள்ளிட்ட ஆன்மிகத் தலங்கள், துறைமுகம், விமான நிலையம், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் வழக்கத்தை விட கூடுதல் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு கண்காணித்து வருகின்றனர்.

   

  திருச்செந்தூர் முருகன் கோயிலில்...
  சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
  சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழவதும் பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்கள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது.
  அதன்படி திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆ.பாரத் தலைமையில், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 
  கோயில் நுழைவுவாயிலில் போலீஸார் பக்தர்களின் உடமைகளை சோதனை செய்த பிறகே தரிசனத்திற்கு அனுமதியளிக்கின்றனர். மேலும் கோயிலில் வெளியே வரும் பகுதி, கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai