ஈராச்சியில் மாட்டு வண்டிப் போட்டிகள்
By DIN | Published On : 19th August 2019 07:02 AM | Last Updated : 19th August 2019 07:02 AM | அ+அ அ- |

ஈராச்சி அருள்மிகு ஸ்ரீ முத்தாலம்மன் கோயில் ஆடி முளைப்பாரி திருவிழாவை முன்னிட்டு தேவர் சமுதாய மக்கள் சார்பில் மாட்டு வண்டிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருவிழாவையொட்டி, பெரிய மாட்டு வண்டி, சிறிய மாட்டு வண்டிப் போட்டிகள் இரு பிரிவுகளாக நடைபெற்றன. 8 மைல் தொலைவு கடக்க வேண்டிய பெரிய மாட்டு வண்டிப் போட்டியில் 6 மாட்டு வண்டிகளும், 6 மைல் தொலைவு கடக்க வேண்டிய சிறிய மாட்டு வண்டிப் போட்டியில் 16 மாட்டு வண்டிகளும் பங்கேற்றன. பெரிய மாட்டு வண்டிப் போட்டியை கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் அய்யப்பன், சிறிய மாட்டு வண்டிப் போட்டியை கொப்பம்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் குருசந்திரவடிவேல் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
பெரிய மாட்டு வண்டிப் போட்டியில் மறுகால்குறிச்சியைச் சேர்ந்த சுப்பம்மாள் மாட்டு வண்டி முதலிடமும், கடம்பூரைச் சேர்ந்த கருணாகரராஜா மாட்டு வண்டி 2ஆவது இடமும், சங்கரப்பேரியைச் சேர்ந்த ஆறுமுகச்சாமி மாட்டு வண்டி 3 ஆவது இடமும் பெற்றன.
சிறிய மாட்டு வண்டிப் போட்டியில் மேலபுத்தனேரியைச் சேர்ந்த செல்வபெருமாள் மாட்டு வண்டி முதலிடமும், கடம்பூரைச் சேர்ந்த கருணாகரராஜா மாட்டு வண்டி 2 ஆவது இடமும், மறுகால்குறிச்சியைச் சேர்ந்த சுப்பம்மாள் மாட்டு வண்டி 3ஆவது இடமும் பெற்றன.
பெரிய மாட்டு வண்டிப் போட்டியில் வெற்றி பெற்ற முதல் 3 இடங்களை பெற்றவர்களுக்கு முறையே ரூ. 15 ஆயிரத்து 17, ரூ.13 ஆயிரத்து 17, ரூ.11ஆயிரத்து 17 ரொக்கப் பரிசும், சிறிய மாட்டு வண்டிப் போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு முறையே ரூ.10ஆயிரத்து 17, ரூ. 8ஆயிரத்து 17, ரூ. 7ஆயிரத்து 17 ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது.