சாகர்மாலா திட்டத்தில் துறைமுகங்களில் 123 வளர்ச்சிப் பணிகள்: மத்திய இணை அமைச்சர்

மத்திய அரசின் சாகர்மாலா திட்டத்தில் நாடு முழுவதும் உள்ள துறைமுகங்களில் 123 பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன

மத்திய அரசின் சாகர்மாலா திட்டத்தில் நாடு முழுவதும் உள்ள துறைமுகங்களில் 123 பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன என்றார் மத்திய கப்பல் துறை இணை அமைச்சர் (தனி பொறுப்பு) மன்சுக் எல். மண்டவியா.
தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை அவர் அளித்த பேட்டி: தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் இருந்து இலங்கை வழியாக பல்வேறு நாடுகளுக்கு கொண்டு செல்லப்படும் சரக்குப் பெட்டகங்களை தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து நேரடியாக கொண்டு செல்ல வழி செய்யும் வகையில் துறைமுகத்தில் பெரிய கப்பல்கள் வருவதற்காக பல்வேறு திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ரூ. 3 ஆயிரம் கோடி செலவில் தூத்துக்குடி துறைமுகத்தை ஆழப்படுத்தும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் 2025 -ஆம் ஆண்டுக்குள் முடிவடையும். தூத்துக்குடி துறைமுகம் பகுதியில் தொழிற்சாலைகள் பல அமைப்பதற்காக 900 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தூத்துக்குடிக்கு பல தொழில் நிறுவனங்கள் வர வாய்ப்புள்ளதால் வேலைவாய்ப்புகளும் உருவாகும். இப்பகுதி மேலும் வளர்ச்சி பெறும்.
கப்பல் துறையின் மூலமாக  நாட்டில் மூன்று நிலையில் தொழில் நிறுவனங்களும் மேம்படும் வகையில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை மேற்கொண்டு வருகிறோம். இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற முடியும்.  நாட்டிலுள்ள துறைமுகங்களை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு கொண்டு வந்த சாகர்மாலா திட்டத்தில் 200 திட்டங்கள் செயல்படுத்த திட்டமிடப்பட்டதில், தற்போது 123 திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார் அவர்.  பேட்டியின்போது, முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உடனிருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com