கோவில்பட்டியில் அனைத்துக் கட்சிக் கூட்டம்
By DIN | Published On : 25th August 2019 12:46 AM | Last Updated : 25th August 2019 12:46 AM | அ+அ அ- |

கோவில்பட்டியில் நடைபெற்று வரும் சாலை விரிவாக்கப் பணியை விரைந்து நடத்துவது மற்றும் நீர்வரத்து ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்த அனைத்துக் கட்சிக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திமுக நகரச் செயலர் கா.கருணாநிதி தலைமை வகித்தார். நகரச் செயலர்கள் பால்ராஜ் (மதிமுக), சரோஜா (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), ஜோதிபாசு (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி), கருப்பசாமிபாண்டியன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி), நகரத் தலைவர்கள் காஜாமைதீன் (இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்), சண்முகராஜா (காங்கிரஸ்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், திமுக மாவட்டத் துணைச் செயலர் ஏஞ்சலா, வர்த்தக அணி அமைப்பாளர் ராஜகுரு, துணை அமைப்பாளர் சேதுரத்தினம், நகரத் துணைச் செயலர் காளியப்பன், முன்னாள் நகரச் செயலர் சிவசுப்பிரமணியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் பரமராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், ரூ.7 கோடி மதிப்பீட்டில் கோவில்பட்டி லக்குமி ஆலை மேம்பாலம் - ரயில்வே மேம்பாலம் வரை நடைபெறும் சாலை விரிவாக்கப் பணியை அரசு அறிவித்துள்ள அளவுபடி முறையாக அமைக்க வேண்டும் என்றும், நீர்வரத்து ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு வருவாய் துறை, நெடுஞ்சாலைத் துறை, அறநிலையத் துறை எடுத்துள்ள முடிவுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: நீர்வரத்து ஓடை ஆக்கிரமிப்புகளை முறையாக அகற்ற வலியுறுத்தி இம்மாதம் 26ஆம் தேதி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளிப்பது. நீர்வரத்து ஓடை ஆக்கிரமிப்பு மற்றும் தனி நபர் ஆக்கிரமிப்பை அகற்றி சாலை விரிவாக்கப் பணியை விரைந்து முடிக்க வேண்டும். கோவில்பட்டி நகராட்சியில் வரி விதிப்பை முறைப்படுத்த வலியுறுத்தியும், வரி விதிப்பு வசூலிப்பில் நடைபெறும் முறைகேடுகளை தவிர்க்க நகராட்சி வருவாய் அலுவலர் மற்றும் உதவி வருவாய் அலுவலரை பணியிடமாற்றம் செய்ய வலியுறுத்தி செப்டம்பர் 7ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.