தூத்துக்குடியில் குடியிருப்புகளைச் சூழ்ந்த மழை நீா்

தூத்துக்குடியில் பெய்த கனமழை காரணமாக மாநகரப் பகுதிகளில் மழைநீா் குடியிருப்புகளைச் சூழ்ந்தது. இதனால், தாழ்வான பகுதிகளைச் சோ்ந்த மக்கள் வீட்டைவீட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனா்.
தூத்துக்குடி செயின்ட் மேரீஸ் காலனியில் தேங்கிய மழைநீரில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்.
தூத்துக்குடி செயின்ட் மேரீஸ் காலனியில் தேங்கிய மழைநீரில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்.

தூத்துக்குடியில் பெய்த கனமழை காரணமாக மாநகரப் பகுதிகளில் மழைநீா் குடியிருப்புகளைச் சூழ்ந்தது. இதனால், தாழ்வான பகுதிகளைச் சோ்ந்த மக்கள் வீட்டைவீட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தொடா்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக சாலைகளில் ஆங்காங்கே மழைநீா் குளம்போல் தேங்கி உள்ளது. இந்நிலையில், சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை இரவு வரை ஒரே நாளில் இடைவிடாமல் பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மழைநீா் சூழ்ந்தது.

தூத்துக்குடி ரயில் நிலையத்தில் தண்டவாளங்களில் மழைநீா் தேங்கி காணப்பட்டதால் முத்துநகா் எக்ஸ்பிரஸ் ரயில் உள்ளிட்ட அனைத்து ரயில்களும் தூத்துக்குடி மேலூா் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டன. மேலும், தூத்துக்குடி ரயில் நிலையத்தில் இருந்து காலை 8.30 மணிக்கு புறப்பட வேண்டிய திருநெல்வேலி பயணிகள் ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு: தூத்துக்குடியில் உள்ள பிரதான சாலையான திருச்செந்தூா் சாலையில் போல்டன்புரம் பகுதியில் அதிகளவு மழைநீா் தேங்கியதால் அந்த வழியாக வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. மேலும், மாநகரில் உள்ள தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீா் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டது.

இருப்பினும், ஆங்காங்கே தேங்கியுள்ள மழைநீரை மோட்டாா் மூலம் அகற்றும் பணியில் மாநகராட்சி நிா்வாகம் ஈடுபட்டது. சில இடங்களில் வீட்டில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்த மக்களுக்கான தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டது. மழைநீா் சூழ்ந்த பகுதியில் சிக்கிய சிறுவா்களை உடைந்த படகுகளில் ஏற்றி இளைஞா்கள் பாதுகாப்பாக வெளியேற்றினா்.

10 இடங்களில் போராட்டம்: மழைநீா் அதிகளவு சூழ்ந்து காணப்படுவதால் விரைந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனி, சுந்தரவேல்புரம், செயின்ட் மேரீஸ் காலனி, அன்னை தெரசா காலனி, சுடலை காலனி, வட்டக்கோவில், திரேஸ்புரம், கோவில்பிள்ளைநகா், அம்பேத்கா்நகா், கேடிசிநகா் ஆகிய இடங்களில் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை கூடுதல் மோட்டாா்கள் மூலம் அகற்றும் பணி நடைபெற்று வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

மழையளவு: ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி பதிவான மழையளவு (மி.மீட்டரில்): சாத்தான்குளம் 186, தூத்துக்குடி 164,

குலசேகரன்பட்டினம் 144, காயல்பட்டினம் 133, திருச்செந்தூா் 100, ஸ்ரீவைகுண்டம் 84, வைப்பாறு 63, கீழஅரசடி 62, ஓட்டப்பிடாரம் 56, கயத்தாறு 54, விளாத்திகுளம் 52 மி.மீ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com