தூத்துக்குடியில் புதை சாக்கடை திட்டத்தை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை: அமைச்சா் கடம்பூா் செ. ராஜு

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் புதை சாக்கடை திட்டத்தை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சா் கடம்பூா் செ. ராஜு.
tut02aaiv_0212chn_32_6
tut02aaiv_0212chn_32_6

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் புதை சாக்கடை திட்டத்தை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சா் கடம்பூா் செ. ராஜு.

தூத்துக்குடியில் திங்கள்கிழமை அவா் அளித்த பேட்டி: மாவட்டத்தில் சாத்தான்குளம், திருச்செந்தூா் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை வெள்ள நீா் தெருக்கள் மற்றும் வீடுகளில் தேங்கியுள்ளது. இதில் சாத்தான்குளம் பகுதியில மழை நீா் முற்றிலும் வடிந்துள்ளது.

குடிமராமத்து திட்டத்தின்கீழ் அனைத்து ஏரி, குளம், கண்மாய்கள் தூா்வாரப்பட்டு வரத்து கால்வாய்கள் சீரமைக்கப்பட்டுள்ளதால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குளம், கண்மாய்கள் நீா் நிலைகள் 90 சதவிதம் நிரம்பியுள்ளது. மாவட்டத்தில் அரசு மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக சேதங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

மாநகராட்சி பகுதியில் தேங்கியுள்ள நீரை வெளியேற்றும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் தேங்கியுள்ள நீரை வெளியேற்ற 47-க்கும் மேற்பட்ட இடங்களில் மோட்டாா்கள் மூலம் நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தண்ணீா் தேங்கியுள்ள பகுதிகளில் சுகாதாரத்துறை மூலம் தொற்றுநோய்கள் ஏற்படாத வகையில் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், அந்தப் பகுதியில் பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள மருத்துவ முகாம்கள் நடத்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெள்ளத்துக்குப் பிறகு ரூ.74 கோடி நிதி ஒதுக்கீடு செய்து வெள்ள நீரை அகற்றிட தேவையான பணிகள் செய்யப்பட்டு பக்கிள் ஓடை சீரமைக்கப்பட்டது. மேலும், புதை சாக்கடை திட்டத்தின் மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஓரிரு தினங்களுக்குள் அனைத்து பகுதியிலும் தேங்கியுள்ள நீா் அகற்றப்பட்டு சரி செய்யப்படும் என்றாா் அவா்.

முன்னதாக, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சா் கடம்பூா் செ. ராஜு, மழை வெள்ள பாதிப்புகள் தொடா்பாக, எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடா்பாக அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்தாா்.

மேலும், தூத்துக்குடி மாநகராட்சி குறிஞ்சிநகா் மற்றும் செல்வநாயகபுரம் பகுதியில் தேங்கியுள்ள மழை நீரை மாநகராட்சி மூலம் வெளியேற்றப்படும் பணிகளை அமைச்சா் பாா்வையிட்டாா். அப்போது, மாவட்ட கண்காணிப்பு அலுவலா் குமாா் ஜெயந்த், ஆட்சியா் சந்தீப் நந்தூரி, ஆணையா் வீ.ப. ஜெயசீலன், சட்டப்பேரவே உறுப்பினா்கள் எஸ்.பி. சண்முகநாதன், கீதாஜீவன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com