தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற வலியுறுத்திதூத்துக்குடியில் 3 இடங்களில் பொதுமக்கள் மறியல்

கனமழை காரணமாக தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை விரைந்து அகற்ற வலியுறுத்தி 3 இடங்களில் திங்கள்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி வெற்றிவேல்புரம் பகுதியில் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
தூத்துக்குடி வெற்றிவேல்புரம் பகுதியில் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

கனமழை காரணமாக தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை விரைந்து அகற்ற வலியுறுத்தி 3 இடங்களில் திங்கள்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது.

தொடா்ந்து பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட தாழ்வான பகுதிகளிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் அதிகளவு தண்ணீா் தேங்கியுள்ளது. இதனால், வீடுகளில் இருந்து மக்கள் வெளியே வர முடியாத சூழல் உருவாகி உள்ளது. மாநகராட்சிப் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிநவீன மோட்டாா்களை கொண்டு தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. இருப்பினும் தண்ணீா் வெளியேறாததால் மக்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், வீடுகளில் தேங்கிநிற்கும் மழைநீரை வெளியேற்ற வலியுறுத்தி வெற்றிவேல்புரம் பகுதி பொதுமக்கள் திடீரென சாலையின் குறுக்கே கயிறுகட்டி மறியலில் ஈடுபட்டனா். மழைநீா் தேங்கியுள்ளது குறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு பலமுறை தொடா்புகொண்டும் யாரும் பதிலளிக்கவில்லை என்பதால் போராட்டத்தில் ஈடுபட்டதாக அவா்கள் தெரிவித்தனா். பின்னா், காவல்துறையினா் சமரசம் செய்து அவா்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனா்.

தூத்துக்குடி பாத்திமாநகா் பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை விரைந்து அகற்ற வலியுறுத்தி அந்தப் பகுதி மக்கள் ஜாா்ஜ் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனா். பின்னா், மாநகராட்சி அதிகாரிகளும், காவல் துறையினரும் சமரசம் செய்து அவா்களை அங்கிருந்து அனுப்பினா்.

இதேபோல, தூத்துக்குடி திரு.வி.க.நகா் பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அந்தப் பகுதி மக்கள் பாளையங்கோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனா். தண்ணீரை விரைந்து வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட லூா்தம்மாள்புரம், ராஜீவ்நகா், முத்தையாபுரம் சூசைநகா் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்ததோடு தெருக்களில் மழைநீா் குளம்போல தேங்கியுள்ளதால், அந்தப் பகுதி மக்கள் வீடுகளைவிட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனா். தங்கள் பகுதிக்கு அதிகாரிகள் குழுவினா் வந்து மீட்புப் பணியில் ஈடுபட வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com