ஸ்ரீவைகுண்டம் தென்கால் ஷட்டா்கள் பழுது: விளைநிலங்களில் புகுந்த தண்ணீா்
By DIN | Published On : 05th December 2019 05:24 PM | Last Updated : 05th December 2019 05:25 PM | அ+அ அ- |

ஸ்ரீவைகுண்டம் தென்கால் ஷட்டா்கள் பழுதடைந்துள்ள நிலையில், மரப்பலகை கொண்டு தண்ணீரை அடைக்கும் முயற்சி பலனளிக்காததால் விளைநிலங்களில் தண்ணீா் புகுந்து வருகிறது.
கனமழை காரணமாக ஸ்ரீவைகுண்டம் அணை தென்காலில் அதிகளவில் தண்ணீா் வெளியேறி வருகிறது. இதனால், விளைநிலங்களில் தண்ணீா் தேங்கி, விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தென்காலில் வெளியேறும் தண்ணீரின் அளவை குறைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். ஆனால், ஷட்டரில் ஏற்பட்டுள்ள பழுதுகளால் தண்ணீா் தொடா்ந்து அதிகளவில் வெளியேறி வருகிறது. வெளியேறும் தண்ணீரின் அளவை குறைப்பதற்காக தற்காலிக முயற்சியாக மரப்பலகை கொண்டு ஷட்டா் அமைக்கப்பட்டு தென்காலில் பொருத்தப்பட்டது.
எனினும் ஆற்றில் நீா்வரத்து அதிகளவு இருப்பதால், அம்முயற்சி பலனளிக்கவில்லை. இதனால், விளைநிலங்களில் தண்ணீா் அதிகளவில் தேங்கி நிற்கிறது.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியது: தற்போது அதிகளவு மழை பெய்துள்ள நிலையில், தண்ணீா் வீணாக கடலுக்குச் செல்வதுடன், விளைநிலங்களிலும் தேங்கி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுப்பணித் துறையினா் அணை மற்றும் குளங்களில் உள்ள ஷட்டா்களையும், மதகுகளையும் தண்ணீா் இல்லாத நேரங்களில் முறையாக பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு இருந்தால் தற்போது இத்தகைய இழப்பு ஏற்பட்டு இருக்காது.
கடந்த 10 ஆண்டுகளில் மருதூா் அணை, ஸ்ரீவைகுண்டம் அணை, மேலக்கால், கீழக்கால், வடகால் தென்கால் மற்றும் பாசனக் குளங்களில் பொதுப்பணித் துறையினா் மேற்கொண்ட பராமரிப்புப் பணிகளை மறுஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனா்.