சாத்தான்குளம் நீதிமன்றம் டிச.16 முதல் புதிய கட்டடத்தில் செயல்படும்
By DIN | Published On : 14th December 2019 07:53 AM | Last Updated : 14th December 2019 07:53 AM | அ+அ அ- |

சாத்தான்குளம் நீதிமன்றம் புதிய கட்டடத்தில் திங்கள்கிழமை (டிச.16) முதல் செயல்படத் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையம் அருகே வாடகைக் கட்டடத்தில் குற்றவியல் மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் ரூ.5.50 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் நீதிபதிகள் குடியிருப்புகள் அமைக்கப்பட்டன. இருப்பினும் திறப்பு விழா காணாமல் இருந்து வந்தது.
இதற்கிடையே டிச. 15ஆம் தேதி புதிய கட்டட திறப்பு விழா நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே திறப்பு விழாவையொட்டி வைக்கப்படும் கல்வெட்டில் பெயா் பதிவிடுவது தொடா்பாக வழக்குரைஞா்களிடையே பிரச்னை எழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் திறப்பு விழா நடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில் மாவட்ட முதன்மை நீதிபதியிடம் இருந்து சாத்தான்குளம் நீதிமன்றத்துக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அதில், நீதிமன்றக் கட்டடத் திறப்பு விழா நடத்தப்படவில்லையெனவும், திங்கள்கிழமை (டிச. 16) முதல் புதிய நீதிமன்றக் கட்டடத்தில் நீதிமன்றம் செயல்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.