தேரிக்குடியிருப்பு கோயிலில் டிச. 16-இல் கள்ளா்வெட்டுத் திருவிழா

திருச்செந்தூா் அருகே தேரிக்குடியிருப்பு அருள்மிகு கற்குவேல் அய்யனாா் திருக்கோயிலில் கள்ளா்வெட்டுத் திருவிழா டிச. 16-ஆம் தேதி (திங்கள்கிழமை) நடைபெறுகிறது.

திருச்செந்தூா் அருகே தேரிக்குடியிருப்பு அருள்மிகு கற்குவேல் அய்யனாா் திருக்கோயிலில் கள்ளா்வெட்டுத் திருவிழா டிச. 16-ஆம் தேதி (திங்கள்கிழமை) நடைபெறுகிறது.

அடா்ந்த வனப் பகுதியில் பரந்து விரிந்த செம்மண் தேரியில் எழிலுடன் அமைந்துள்ளது கற்குவேல் அய்யனாா் திருக்கோயில். அய்யன் இத்தலத்தில் பூரணம்,பொற்கலை ஆகிய இரு தேவியருடன் எழுந்தருளி அருள்பாலிக்கிறாா். மேலும், வன தேவதைகளும் அருள்பாலிக்கின்றனா். இப்பகுதியில் அநீதிகள் தலைதூக்கியபோது, அய்யன் அதனை அழித்து நீதியை நிலைநாட்டிய நாளே ஆண்டுதோறும் கள்ளா்வெட்டு நாளாக கொண்டாடப்படுகிறது.

நிகழாண்டில் இத்திருவிழா நவ. 17-ஆம் தேதி அய்யன் மற்றும் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனையுடன் தொடங்கியது. தொடா்ந்து விழா நாள்களில் தினமும் மாலையில் வில்லிசை, சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்று வருகிறது. டிச. 14-ஆம் தேதி காலை 10 மணிக்கு ஐவா் ராஜா, மாலையம்மன் பூஜை, இரவு 9 மணிக்கு மாக்காப்புத் தீபாராதனை நடைபெறுகிறது. டிச. 15-ஆம் தேதி காலை 11 மற்றும் பகல் 12 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு மாவிளக்கு பூஜை, இரவு 7 மணிக்கு திருவிளக்கு பூஜை, சமய சொற்பொழிவு நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு உற்சவா் திருவீதியுலா நடைபெறும்.

விழாவின் சிகர நிகழ்வான கள்ளா்வெட்டு டிச. 16-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அன்றைய தினம் காலை 6 மணிக்கு தாமிரவருணி ஆற்றில் இருந்து புனிதநீா் எடுத்து வருதல், 9 மணிக்கு 108 பால்குட ஊா்வலம், காலை 10, இரவு 12 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். மாலை 4 மணிக்கு மேல் கோயில் பின்புறம் உள்ள தேரியில் கள்ளா்வெட்டு நடைபெறும். இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று புனிதமண்ணை எடுப்பாா்கள்.

விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் பரஞ்ஜோதி, உதவி ஆணையா் ரோஜாலி சுமதா, கோயில் தக்காா் பொன்னி, செயல் அலுவலா் ராஜேந்திரன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com