தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் குடிநீர் உறிஞ்சியதாக 18 மோட்டார்கள் பறிமுதல்
By DIN | Published On : 12th February 2019 04:49 AM | Last Updated : 12th February 2019 04:49 AM | அ+அ அ- |

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் குடிநீர் உறிஞ்ச பயன்படுத்தப்பட்ட 18 மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் மாநகராட்சியின் அனுமதியின்றி முறைகேடாக குடிநீர் குழாய் இணைப்பில் மின்மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சுவதால் குடிநீர் விநியோகம் வெகுவாகப் பாதிப்படைகிறது.
மேலும், குடிநீர் விநியோகத்தின் கடைசி பகுதிகளுக்கு குடிநீர் கிடைக்காமல் பாதிக்கப்படுவதாக பல்வேறு தரப்பினரிடமிருந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இதனால் மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் குடிநீர் விநியோகப் பணியாளர்கள் அடங்கிய குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மாநகராட்சியால் வழங்கப்பட்ட குடிநீர் குழாய் இணைப்பில் முறைகேடாக பொருத்தப்பட்ட 18 மின்மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.
பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்கிட இதுபோன்ற திடீர் ஆய்வுகள் மாநகரின் அனைத்து பகுதிகளிலும் தொடரும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.