சுடச்சுட

  

  அரசுப் பேருந்து பணிமனையை மூடுவதற்கு எதிர்ப்பு: சாத்தான்குளத்தில் கடையடைப்பு, உண்ணாவிரதம்

  By DIN  |   Published on : 13th February 2019 06:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சாத்தான்குளம் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதை கண்டித்து வியாபாரிகள், அனைத்துக் கட்சி சார்பில் செவ்வாய்க்கிழமை கடையடைப்பு  மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
  சாத்தான்குளத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பின்பேரில் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை தெடங்கப்பட்டு 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் 6 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. போதிய வருவாய் இல்லாததால் பணிமனை  மூடப்பட்டு வேறு பணிமனையுடன் இணைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது. இந்த நடவடிக்கையை கண்டித்து அனைத்துக் கட்சியினர், சமூக அமைப்பினர், வியாபாரிகள் சங்கம் சார்பில் 12ஆம் தேதி கடையடைப்பு மற்றும் உண்ணாவிரதம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக அதிகாரிகள் கடந்த 8ஆம் தேதி ஏற்பாடு செய்த சமாதானக் கூட்டத்தில் உடன்பாடு ஏற்படவில்லை. இதைத் தொடர்ந்து, அறிவிக்கப்பட்டபடி செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தப்பட்டது. நகரில் 400-க்கு மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன.
  மேலும், இங்குள்ள தூய ஸ்தேவான் ஆலயம் முன்பிருந்து அனைத்துக் கட்சியினர், வியாபாரிகள் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் ஊர்வலமாகப் புறப்பட்டு வந்தனர். பின்னர், சாத்தான்குளம் பழைய  பேருந்து  நிலையம் காமராஜர் சிலை முன் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. ஒன்றிய திமுக செயலரும், அனைத்துக் கட்சி ஒருங்கிணைப்புத் தலைவருமான ஏ.எஸ். ஜோசப் தலைமை வகித்தார். வியாபாரிகள் சங்கத் தலைவர் ஆர். துரைராஜ்,  மனிதநேய நல்லிணக்க பெருமன்ற செயலர் மகா. பால்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
  தமிழ் விவசாயிகள் சங்க மாநில செயலர் பாலசுப்பிரணியன், வியாபாரிகள் சங்க செயலாளர் மதுரம்  செல்வராஜ், பொருளாளர் பாபுசுல்தான், நகர காங்கிரஸ் தலைவர் ஆ.க. வேணுகோபால், மார்க்சிஸ்ட் மாவட்டக் குழு உறுப்பினர் அ. பாலகிருஷ்ணன், மனித நேய நல்லிணக்க பெருமன்ற தலைவர் கணபதி, மாவட்ட திமுக பிரதிநிதிகள் நயினார், அலெக்ஸ் புரூட்டோ, மாவட்ட காங்கிரஸ் செயலர் தேவசகாயம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட விவசாய பிரிவு செயலர் கருவேலம்பாடு சுகுமார், அமமுக பண்டாரபுரம் ஊராட்சி செயலர் ராஜபாண்டியன் ஆகியோர் பேசினர்.
  தச்சமொழி முன்னாள் ஊராட்சித் தலைவர் ராஜசிங் ஆசீர், மார்க்கிஸ்ட் ஒன்றியச் செயலர் கு. ஜெயபால், விசிக ஒன்றியச் செயலர் ம. ஜெயராமன், மதிமுக ஒன்றியச் செயலர் பலவேச பாண்டியன், தமிழ் விடுதலைப் புலிகள் மாநில துணைச் செயலர் சுடலைமுத்து, மாவட்ட காங்கிரஸ் செயலர் சங்கர், நட்சத்திர அரிமா சங்க முன்னாள் செயலர் சாமுவேல்,  மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்க மாநில அமைப்பாளர் இசக்கிமுத்து, மாவட்ட திமுக பிரதிநிதி சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
  "இதையடுத்து, சாத்தான்குளம்  வட்டாட்சியர் ஞானராஜ், காவல் ஆய்வாளர் ராஜாசுந்தர் ஆகியோர் போராட்டக் குழுவினரிடம் பேச்சு நடத்தினர். அதில், திருச்செந்தூர் கோட்டாட்சியர் கோவிந்தராசு பணிமாறுதலாகி சென்றதையடுத்து, புதிய  கோட்டாட்சியர்  வியாழக்கிழமை (பிப். 14) பொறுப்பேற்கிறார். அவர் பொறுப்பேற்றவுடன், இந்தப் பணிமனை விவகாரத்தை கூறி, போக்குவரத்துத் துறை உயர் அதிகாரிகளை அழைத்து வரும் 20ஆம் தேதி பேச்சு நடத்தி தீர்வு காணப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து, 4 மணி நேரம் நடைபெற்ற உண்ணாவிரதம் மற்றும் கடையடைப்புப் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai