சுடச்சுட

  

  "மன்னார் வளைகுடா பகுதியில் உள்ள 21 தீவுகளிலும் புனரமைப்பு நடவடிக்கை'

  By DIN  |   Published on : 13th February 2019 06:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மன்னார் வளைகுடா பகுதியில் உள்ள 21 தீவுகளிலும் புனரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் மன்னார் வளைகுடா உயிர்க்கோள காபப்பக அறக்கட்டளை இயக்குநர் தூ.கோ. அசோக்குமார்.
  தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில், மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரினங்களை பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வு கண்காட்சியை செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:
  மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அரியவகை உயிரினங்கள் ஒன்றை ஒன்று சார்ந்துள்ளது என்பதால், அதனை பாதுகாப்பதற்காக கடந்த 2001ஆம் ஆண்டு புதிய சட்டம் ஏற்படுத்தப்பட்டது. தடை செய்யப்பட்ட கடல் உயிரினங்களை உயிருள்ள அல்லது உயிரற்ற நிலையில் வைத்திருப்பது, வியாபாரம் செய்வது தெரியவந்தால் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கப்படும். 
  இந்த சட்டத்தின்படி இதுவரை 300-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
  மன்னார் வளைகுடா கடல் பகுதியில் உள்ள 117 வகை பவளப்பாறைகளை பாதுகாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி முதல் ராமேஸ்வரம் வரை உள்ள மன்னார் வளைகுடா கடல் பகுதியில் உள்ள 4,200 க்கும் அதிகமான அரிய வகை உயிரினங்களை பாதுகாக்கும் வகையில் அந்தப் பகுதியில் உள்ள 21 தீவுகளிலும் புனரமைப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார் அவர்.
  பிப்ரவரி 14 ஆம் தேதி வரை நடைபெறும் கண்காட்சியில் அரிய வகை கடல் உயிரினங்களான திமிங்கல வகைகள், ஓங்கி வகைகள், கடல் பசு, கடல் ஆமைகள், சுறா, கங்கை சுறா, பனை மீன்,  பால் சுறா, கடல் குதிரை, திருக்கை, வேளா மீன் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. மேலும்,  கடல்வாழ் உயிரினங்களின் உணவுக்கான கடல் தாவரங்கள், அதன் வாழ்விடம் மற்றும் இனப்பெருக்கத்துக்கான அனைத்துவகை பவளப்பாறைகள், கடல் விசிறிகள், கடல் அட்டைகள், கடல் பஞ்சுகள் உள்ளிட்டவையும் இடம் பெற்றுள்ளன. இதுதவிர,  தவளை சங்கு, வாழைப்பூ சங்கு போன்ற அரியவகை சங்குகள், சோவி வகைகள்  உள்ளிட்டவையும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.
  விழிப்புணர்வு கண்காட்சியில் சுற்றுச்சூழல் மாசுபடுதல், புவி வெப்பமயமாதல் போன்ற காரணங்களால் மன்னார் வளைகுடா பகுதியும் பாதிக்கப்படுவது குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
  கண்காட்சியை தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் பார்வையிட்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai