கயத்தாறில் மறியல்: இந்து மக்கள் கட்சியினர் 18 பேர் கைது
By DIN | Published On : 04th January 2019 12:41 AM | Last Updated : 04th January 2019 12:41 AM | அ+அ அ- |

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 50 வயதுக்குள்பட்ட 2 பெண்கள் சுவாமி தரிசனம் செய்ததைக் கண்டித்து கயத்தாறில் இந்து மக்கள் கட்சி சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற மறியல் போராட்டத்தில் பங்கேற்ற 18 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் 50 வயதுக்குள்பட்ட 2 பெண்கள் புதன்கிழமை சுவாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து, பல்வேறு மாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதையொட்டி, கயத்தாறில் இந்து மக்கள் கட்சி மாவட்டச் செயலர் லட்சுமிகாந்தன் தலைமையில், ஒன்றியச் செயலர் செல்லத்துரை, ஒன்றியத் தலைவர் ராமசாமி, ஒன்றியப் பொதுச் செயலர் ரவி, கோவில்பட்டி நகரத் தலைவர் தளவாய்ராஜ், தென்மண்டல இளைஞரணிச் செயலர் மாரிமுத்து உள்பட 18 பேர் கயத்தாறு புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாகச் சென்று, மேலபஜார் விலக்கில் சாலை மறியலில் ஈடுபட்டு, கேரள அரசைக் கண்டித்து கோஷமிட்டனர். இதையடுத்து, கயத்தாறு காவல் ஆய்வாளர் ஆவுடையப்பன் தலைமையிலான போலீஸார் மறியலில் ஈடுபட்ட 18 பேரை கைது செய்தனர்.