Enable Javscript for better performance
வஉசி சந்தையை இடிக்க எதிர்ப்பு: ஆட்சியரிடம் வியாபாரிகள் மனு- Dinamani

சுடச்சுட

    

    வஉசி சந்தையை இடிக்க எதிர்ப்பு: ஆட்சியரிடம் வியாபாரிகள் மனு

    By DIN  |   Published on : 08th January 2019 07:42 AM  |   அ+அ அ-   |    |  

    தூத்துக்குடி வஉசி சந்தையை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள வியாபாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
    தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தின்போது பொதுமக்களிடம் இருந்து ஆட்சியர் சந்தீப் நந்தூரி மனுக்களைப் பெற்றார். அப்போது, தூத்துக்குடி வஉசி சந்தை வியாபாரிகள் 200-க்கும் மேற்பட்டோர் அளித்த மனு விவரம்:
    வஉசி சந்தையில் நல்ல நிலையில் உள்ள கடைகளை இடித்துக் கட்டுவதால் பொதுமக்களுக்கும், அரசுக்கும் எந்தப் பயனும், லாபமும் ஏற்படப் போவதில்லை. வீண் செலவு மட்டும ஏற்படும். வஉசி சந்தையை நம்பி ஏறத்தாழ 8 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. எனவே, வஉசி சந்தை கட்டடத்தை இடித்து புதிய கட்டடம் கட்டும் திட்டத்தைக் கைவிட வேண்டும்.
    சாலைகளை சீரமைக்க மனு: அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மகளிரணிச் செயலர் சந்திரா மற்றும் நிர்வாகிகள் ஆட்சியரிடம் அளித்த மனு: தூத்துக்குடி மில்லர்புரம் பகுதியில் உள்ள ஹவுசிங் போர்டு, பாரதிநகர், கதிரேசன்நகர், ராஜகோபால்நகர், பால்பாண்டிநகர், எஸ்பிஎம் நகர், ராஜீவ்நகர், காந்திநகர், நிகிலேசன்நகர், அன்னை தெரசாநகர், ஹரிராம்நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் அனைத்தும் பழுதடைந்து உள்ளதால் புதிய சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரிக்கை: தூத்துக்குடி கால்டுவெல் காலனி துளசி மகளிர் சுயஉதவிக் குழு, சாமிநகர் குறிஞ்சி மலர் மகளிர் சுயஉதவிக் குழு, கிருஷ்ணராஜபுரம் 3ஆவது தெரு பகுதி மக்கள் என 200-க்கும் மேற்பட்டோர் அளித்த மனு விவரம்: ஸ்டெர்லைட் ஆலை 25 ஆண்டு காலமாக இயங்கி வந்தது. எங்கள் பகுதி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது பல உதவிகளைச் செய்தார்கள். ஆலை தற்போது மூடப்பட்டுள்ளதால் படித்தவர்களுக்கும் தற்போது வேலை வாய்ப்பு இல்லை. எனவே, ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    நவீன சைக்கிள் வழங்க வேண்டும்: ஓட்டப்பிடாரம் கீழத்தெருவைச் சேர்ந்த ஏசுதாசன்  மகள்கள் ஸ்ரீமதி, நிறைமதி ஆகியோர் ஆட்சியரிடம் அளித்த மனு: சைக்கிள் போட்டியில் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு பல பதக்கங்களை வென்றுள்ளோம். ஆனால், எங்களுக்கு விலை உயர்ந்த கார்பன் சைக்கிள் வாங்கும் அளவுக்கு நிதி வசதி இல்லை என்பதால் நவீன ரக சைக்கிள் வழங்க வேண்டும்.
    முறைகேடுகள் குறித்து புகார் அளிக்க வசதி: தூத்துக்குடி மாவட்ட மதிமுக செயலர் ஆர்.எஸ். ரமேஷ் தரப்பில் ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு:  பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கும்போது பல்வேறு முறைகேடுகள், தவறுகள் நடைபெறுவதற்குரிய வாய்ப்புகள் உள்ளதால் அதுகுறித்து புகார் அளிக்க தனித்தனியாக தொலைபேசி எண்கள், செல்லிடப்பேசி எண்களை பொதுமக்களுக்கு தெரிவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp