பொது வேலைநிறுத்தம்: துறைமுகம், வங்கிகளில் பணிகள் பாதிப்பு

மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து ஜன. 8,  9 ஆம் தேதிகளில் பொதுவேலைநிறுத்தம்

மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து ஜன. 8,  9 ஆம் தேதிகளில் பொதுவேலைநிறுத்தம் நடைபெறும் என 11 மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.  அதன்படி, தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை மத்திய அரசு நிறுவனங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன. தொழிற்சங்கத்தினர் 3 இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் 60 சதவீதம் பேர் பணிக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதேபோல, தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் 60 சதவீதத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்றதால் பணிகள் பாதிக்கப்பட்டன.
 இதுதவிர, பிஎஸ்என்எல் அலுவலகம்,  அஞ்சல் அலுவலகங்கள்,  ஆயுள் காப்பீட்டுக் கழக நிறுவனம் உள்ளிட்டவைகளில் 90 சதவீத ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்றதால் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. தமிழக அரசு ஊழியர்கள் 15 சதவீதம் பேர் மட்டுமே போராட்டத்தில் பங்கேற்றதால் பணிகள் ஏதும் பாதிக்கப்படவில்லை.
மேலும், பேருந்துகள், தனியார் பேருந்துகள், ஆட்டோ, வேன், கார் உள்ளிட்டவை வழக்கம்போல இயக்கப்பட்டதால் இயல்புநிலையில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.  இருப்பினும்,  மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
ஆர்ப்பாட்டம்: அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம்,  அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம், இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் ஆகியவை சார்பில், தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள கனரா வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி நகர வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், இந்திய வங்கி ஊழியர் சம்மேளன நிர்வாகி நவநீதகிருஷ்ணன், பாண்டியன் கிராம வங்கி ஊழியர் சங்க நிர்வாகி தங்கமாரியப்பன், எல்ஐசி ஊழியர் சங்க நிர்வாகி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
இதேபோல, கோரிக்கைகளை வலியுறுத்தியும்,  மத்திய அரசைக் கண்டித்தும் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பிலும்,  துறைமுக நிர்வாக அலுவலகம் முன்பு சிஐடியூ மாவட்டச் செயலர் ஆர். ரசல் தலைமையில் துறைமுக ஊழியர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எட்டயபுரத்தில்...
விளாத்திகுளம்: தொழிற்சங்கங்களின் அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து எட்டயபுரம் பாரதி கூட்டுறவு நூற்பாலையில் பணியாற்றக்கூடிய சி.ஐ.டி.யு. ஏ.ஐ.டி.யு.சி. தொ.மு.ச., அண்ணா தொழிற்சங்கம், தொழில்நுட்ப பணியாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த 280 நிரந்தர மற்றும் தற்காலிக தொழிலாளர்களும் பணிக்கு செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
ஒரு தொழிலாளி கூட வேலைக்கு செல்லாத காரணத்தினால் இயந்திரங்கள் நிறுத்தப்பட்டன. நூல் உற்பத்தி மற்றும் தொடர்புடைய இதர பணிகளும் தடைபட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com