காணும் பொங்கல்: தூத்துக்குடி கடற்கரை, பூங்காக்களில் குவிந்த மக்கள்

மாட்டுப் பொங்கல் மற்றும் காணும் பொங்கலையொட்டி தூத்துக்குடி கடற்கரை மற்றும் பூங்காக்களில் புதன்கிழமை ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்.

மாட்டுப் பொங்கல் மற்றும் காணும் பொங்கலையொட்டி தூத்துக்குடி கடற்கரை மற்றும் பூங்காக்களில் புதன்கிழமை ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்.
தூத்துக்குடி வடக்கு கடற்கரைச் சாலையில் உள்ள முத்துநகரில் மக்கள் குடும்பத்துடன் வந்து காணும் பொங்கலை கொண்டாடினர். துறைமுகத்தை ஒட்டி அமைந்துள்ள முயல் தீவுக்கு பொதுமக்கள் காலை முதலே வரத் தொடங்கினர். சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் கடலில் உற்சாகமாக குளித்தும், செல்லிடப்பேசிகளில் படங்கள் எடுத்தும் மகிழ்ந்தனர். பொதுமக்களின் வசதிக்காக தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்திலிருந்து முயல் தீவிற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. 
இதேபோன்று, தூத்துக்குடி துறைமுக கடற்கரை, ரோச் பூங்கா ஆகிய கடற்கரைப் பகுதிகளிலும் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.  மாலை வேளையில் திரளானோர் குடும்பத்துடன் கடற்கரையில் திரண்டு காணும் பொங்கலை கொண்டாடினர்.
தூத்துக்குடி நகரின் பிரதான பூங்காவான ராஜாஜி பூங்காவில் குடும்பத்துடன், உறவினர்களுடன் திரண்ட மக்கள்,  பொங்கல் அன்று செய்த பலகாரங்களை கொண்டு வந்து உண்டு மகிழ்ந்தனர். விளையாட்டுச் சாதனங்களில் குழந்தைகள் விளையாடினர்.
இதேபோன்று நேரு பூங்கா, சிதம்பரநகர் எம்.ஜி.ஆர். பூங்கா, வி.வி.டி. பூங்கா, சங்கரநாராயணன் பூங்கா உள்ளிட்ட அனைத்து பூங்காக்களிலும் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.
மாவட்டம் முழுவதும் சுமார் 2 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். மாநகரப் பகுதிகளில் வழக்கத்தைவிட கூடுதலாக ரோந்து பணிகளில் போலீஸார் ஈடுபட்டிருந்தனர்.
விளாத்திகுளம்: விளாத்திகுளம் அம்பாள் நகர் ஸ்ரீஅம்பாள் கோசாலையில் மாட்டுப் பொங்கல் தினத்தை முன்னிட்டு மாடுகளுக்கு மஞ்சள், குங்குமம் இட்டு, ஆடை அணிவித்து, கழுத்தில் புதிய கயிறு கட்டி பொங்கல் வைத்து சூரியனையும், மாடுகளையும் வணங்கி தீபாராதனை செய்தனர். தொடர்ந்து மாடுகளுக்கு பொங்கல் உணவு மற்றும் பழங்களை வழங்கினர். 
விளாத்திகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் வைப்பாற்றுக்கு சென்று காணும் பொங்கலை குடும்பத்துடன் கொண்டாடினர். கபடி போட்டி, கோ-கோ போட்டி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
வேம்பார், சிப்பிகுளம் கடற்கரை பகுதிகளில் திரண்ட மக்கள் கடற்கரை அழகை ரசித்தும், கடலில் குளித்தும் கானும் பொங்கலை கொண்டாடினர்.
பாஞ்சாலங்குறிச்சி கட்டப்பொம்மன் கோட்டையில் சுற்றுலாத்துறை சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. தொடர்ந்து அரசு இசைப்பள்ளி மாணவர்களின் கரகாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம், பரதநாட்டியம், மெல்லிசை போன்ற பல்வேறு கலைநிகச்சிகள் நடைபெற்றன. விழாவை முன்னிட்டு கோட்டையில் உள்ள வீரபாண்டிய கட்டப்பொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 
வீரசக்கதேவி ஆலய வளாகத்தில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு கோ பூஜை நடைபெற்றது. இதில், கட்டப்பொம்மன் வழித்தோன்றல்கள், வீரசக்கதேவி ஆலயக் குழுவினர், ஊர்பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com