கட்டண நிலுவை: பிஎஸ்என்எல் செல்லிடப்பேசி கோபுரத்தின் மின் இணைப்பு துண்டிப்பு
By DIN | Published On : 24th January 2019 01:10 AM | Last Updated : 24th January 2019 01:10 AM | அ+அ அ- |

சாத்தான்குளம் அருகே மின்கட்டண நிலுவை காரணமாக பிஎஸ்என்எல் செல்லிடப்பேசி கோபுரத்தின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
பேய்க்குளம் சாலைபுதூரில், மீரான்குளம் செல்லும் சாலையில் பிஎஸ்என்எல் செல்லிடப்பேசி கோபுரம் உள்ளது. இதன்மூலம், சாலைபுதூர், மீரான்குளம், குருகால்பேரி, ஆசீர்வாதபுரம், பழனியப்பபுரம், தேர்க்கன்குளம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதன் வாடிக்கையாளர்கள் பயனடைந்து வருகின்றனர். இதற்கிடையே, கடந்த ஒருவாரமாக சாலைபுதூர் உள்ளிட்ட கிராமங்களில் பிஎஸ்என்எல் செல்லிடப்பேசிகள் சிக்னல் கிடைக்காமல் முடங்கின.
சாலைபுதூரில் உள்ள செல்லிடப்பேசி கோபுரத்துக்கான மின்கட்டணம் செலுத்தப்படாமல் உள்ளதால், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சில இடங்களில் செல்போன் கோபுரங்கள் பேட்டரியால் இயங்கும் நிலையில், இங்கு பேட்டரியும் செயலிழந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அப்பகுதியில் பிஎஸ்என்எல் செல்லிடப்பேசி பயன்படுத்தி வந்தவர்கள் தனியார் செல்லிடப்பேசிக்கு மாறிவருகின்றனர். இதேபோல், பேய்க்குளம் பஜாரிலும் சிக்னல் சரியாக கிடைக்கவில்லை என வியாபாரிகள், பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
எனவே, அதிகாரிகள் உடனடியாக செல்லிடப்பேசி கோபுரத்துக்கான மின் கட்டணத்தை செலுத்தி, அந்த கோபுரத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.