வாக்காளர் பட்டியல் புகார்: தூத்துக்குடியில் புதிய திட்டம் அறிமுகம்
By DIN | Published On : 28th January 2019 01:29 AM | Last Updated : 28th January 2019 01:29 AM | அ+அ அ- |

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் தொடர்பான தகவல், சந்தேகங்களை தொலைபேசி எண்ணில் அறிந்து கொள்ளும் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கப்பட்டுள்ள தகவல் மையத்தை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்து பார்வையிட்டார். அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் மு. வீரப்பன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தியாகராஜன், தேர்தல்பிரிவு தனி வட்டாட்சியர் நாகராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.
அப்போது, ஆட்சியர் கூறியது: இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கப்பட்டுள்ள தகவல் மையத்தில் வாக்காளர் பட்டியல் தொடர்பான தங்களது குறைகள் மற்றும் சந்தேகங்களுக்கு 0461-1950 என்ற கட்டணமில்லா அழைப்பு எண்ணுக்கு பொதுமக்கள் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தங்கள் மேற்கொள்ளுதல், ஒரே பேரவைத் தொகுதிக்குள் முகவரி
மாற்றம் செய்தல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை பெறுதல் போன்றவை தொடர்பான விவரங்களை அறிந்து கொள்ளும் வகையில் இந்த மையம் திறக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் மாவட்ட தகவல் மையத்தின் சேவையை பயன்படுத்தி கொள்ளலாம் என்றார் அவர்.