திருச்செந்தூரில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் ஆய்வுக்குப் பிறகு தொடங்கப்படும்: அமைச்சர்

திருச்செந்தூரில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் ஆய்வுக்குப் பிறகு, மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் தொடங்கப்படும் என்றார் அமைச்சர் கடம்பூர் செ. ராஜு.

திருச்செந்தூரில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் ஆய்வுக்குப் பிறகு, மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் தொடங்கப்படும் என்றார் அமைச்சர் கடம்பூர் செ. ராஜு.
இதுகுறித்து திருச்செந்தூரில் சனிக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
மறைந்த முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் திருச்செந்தூர் மற்றும் சென்னையில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்திருந்தார். அதனடிப்படையில், தற்போது சென்னை  நெமிலியில் இத்திட்டத்திற்கு முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அடிக்கல் நாட்டியுள்ளார். அதேபோல,  திருச்செந்தூர் அருகே ஆலந்தலையிலும் ஆய்வுசெய்யப்பட்டு, மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் திட்டம் செயல்படுத்தப்படும்.
தூத்துக்குடியின் தொழிற்தேவையை பூர்த்திசெய்யவே முள்ளக்காடு பகுதியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் ரூ. 634 கோடியில் தொடங்கப்படும் என சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வெள்ளிக்கிழமை அறிவித்தார் என்றார் அவர்.
அமைச்சர் செல்லூர் கே. ராஜு கூறியது: நீட் தேர்வுக்கு தடைகோரியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மனைவி நளினி. அதிமுக மதவாத கட்சி கிடையாது. முஸ்லிம்களுக்கு மெக்கா புனிதப் பயணம் செல்லவும், கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் செல்லவும் நிதி ஒதுக்கப்படுகிறது. திமுக கடந்த காலங்களில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. அப்போது அது மதவாத கட்சி என்பது தெரியவில்லையா என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து, அமைச்சர்கள் இருவரும் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com