பனிமய மாதா பேராலய திருவிழா:தூத்துக்குடி மாநகரில் போக்குவரத்து மாற்றம்
By DIN | Published On : 18th July 2019 12:34 AM | Last Updated : 18th July 2019 12:34 AM | அ+அ அ- |

பனிமய மாதா பேராலய திருவிழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மாநகரப் பகுதியில் திருவிழா நாள்களில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றார் மாநகரக் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆர். பிரகாஷ்.
இதுகுறித்து புதன்கிழமை அவர் அளித்த பேட்டி: தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா ஜூலை 26ஆம் தேதி தொடங்கி ஆக. 5ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
விழாவுக்கு வந்து செல்லும் பொதுமக்களின் போக்குவரத்து வசதிக்காக சில மாற்றங்கள் செய்யப்பட்டு, நகரின் வடக்கு பகுதியில் இருந்து வருபவர்களுக்கு நான்கு சக்கர வாகனங்களை நிறுத்த முத்துநகர் கடற்கரை வளாகமும், இரு சக்கர வாகனங்களை நிறுத்த பழைய துறைமுக சாலையோர பகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தெர்மல்நகர், முத்தையாபுரம் பகுதியில் இருந்து வருபவர்களுக்கு மீன்பிடி துறைமுக வளாகம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நகரின் உள்பகுதியிலிருந்து வருபவர்களுக்கு இருசக்கர வாகனங்களை நிறுத்த தீயணைப்பு நிலையம் அருகிலும், லசால் பள்ளி வளாகமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
நான்கு சக்கர வாகனங்களை நிறுத்த காரப்பேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போதிய போக்குவரத்து காவலர்களை கொண்டு போக்குவரத்தை ஒழுங்கு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திருவிழாவுக்கு வந்து செல்லும் குழந்தைகளின் பாதுகாப்பு நலன் கருதி, புதிய முயற்சியாக கோயிலுக்கு வரும் அனைத்து குழந்தைகளின் கைகளிலும் பெற்றோர் விவரம் மற்றும் தொலைபேசி எண் அடங்கிய கை வளையம் (டிஜிட்டல் பேன்ட்) காவல்துறை மூலம் அணிவிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
200 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, புறக்காவல் நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டு, குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை காவல்துறையினரால் கண்காணித்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார் அவர்.
பேட்டியின் போது, மத்தியபாகம் காவல் ஆய்வாளர் ஜெயபிரகாஷ், வடபாகம் காவல் ஆய்வாளர் பார்த்திபன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் சிசில் ஆகியோர் உடனிருந்தனர்.