முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
ரயில்வே சுரங்கப்பாதை மூடல்: கோவில்பட்டி அருகே மாற்றுப்பாதை அமைக்கக் கோரிக்கை
By DIN | Published On : 30th July 2019 07:13 AM | Last Updated : 30th July 2019 07:13 AM | அ+அ அ- |

கோவில்பட்டி இனாம்மணியாச்சி ஊராட்சி கிருஷ்ணா நகரில் விரிவாக்கப்பணிக்காக ரயில்வே சுரங்கப்பாதை மூடப்பட்டதால் அப்பகுதி மக்களுக்கு மாற்றுப்பாதை அமைக்கக் கோரி குடியிருப்போர் நலச் சங்கத்தினர் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனர்.
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்டது இனாம்மணியாச்சி ஊராட்சி ஆவல்நத்தம் கிருஷ்ணா நகர் ஹவுசிங் போர்டு பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதை, ரயில்வே இருவழிப்பாதை பணிகள் நடைபெறவிருப்பதால் சுரங்கப்பாதை விரிவாக்கப் பணிக்காக மூடப்பட்டது.
இதையடுத்து, கிருஷ்ணா நகர், ஹவுசிங் போர்டு உள்ளிட்ட பகுதிகளில் குடியிருக்கும் சுமார் 400 க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் கோவில்பட்டி நகருக்கு வருவதற்கு சுமார் 4 கி.மீ. தொலைவு சுற்றி வர வேண்டியுள்ளதாம். இப்பகுதி மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், அரசு மற்றும் தனியார் நிறுவன அலுவலர்களின் நலன் கருதி ரயில்வே சுரங்கப்பாதை விரிவாக்கப் பணி முடிவடையும் வரை பாதுகாப்புடன் கூடிய மாற்றுப்பாதையை அமைக்க வலியுறுத்தி கிருஷ்ணா நகர், ஹவுசிங் போர்டு குடியிருப்போர் நலச் சங்க துணைத் தலைவர் கனகராஜ் தலைமையில், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு திரண்டனர். பின்னர், அவர்கள் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜோசப்பிடம் கோரிக்கைமனு அளித்தனர். இதுகுறித்து குடியிருப்போர் நலச் சங்க நிர்வாகிகள், செய்தியாளர்களிடம் கூறுகையில், தங்கள் கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.