திருச்செந்தூரில் இன்றுமுதல் தலைக்கவசம் அணிந்தால்தான் பெட்ரோல்: விபத்தை தடுக்க புதிய முயற்சி

விபத்தை தடுக்கும் முயற்சியாக திருச்செந்தூர் பகுதியில் தலைக்கவசம் அணிந்தால்தான் பெட்ரோல் வழங்கும்

விபத்தை தடுக்கும் முயற்சியாக திருச்செந்தூர் பகுதியில் தலைக்கவசம் அணிந்தால்தான் பெட்ரோல் வழங்கும் வகையில் புதிய திட்டம் சனிக்கிழமை (ஜூன் 1)முதல் செயல்படுத்தப்பட உள்ளது என்றார் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆ.பாரத்.
திருச்செந்தூர் காவல் உள்கோட்டப் பகுதியைச் சேர்ந்த பெட்ரோல் விற்பனை நிறுவனங்களுடன் இணைந்து, தலைக்கவசம் அணிந்தால் தான் பெட்ரோல் வழங்கும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக வெள்ளிக்கிழமை திருச்செந்தூர் பகத்சிங் பேருந்து நிலையம் எதிரே உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆ.பாரத் தலைமை வகித்தார். 
தொடர்ந்து, தலைக்கவசம் அணிந்து பெட்ரோல் நிரப்ப வந்த இருசக்கர வாகன ஓட்டிகள் 30 பேருக்கு தலா ஒரு லிட்டர் பெட்ரோலை அவர் இலவசமாக வழங்கினார். 
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: திருச்செந்தூர் பகுதியில் நிகழ்ந்த இருசக்கர வாகன விபத்துகளில் தலைக்கவசம் அணியாததால்தான் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. எனவே, விபத்துகளை குறைப்பதற்காக பெட்ரோல் விற்பனை நிலையங்களுடன் இணைந்து, தலைக்கவசம் அணிந்தால்தான் பெட்ரோல் வழங்கும் வகையில் புதிய திட்டத்தை சனிக்கிழமைமுதல் அமல்படுத்துகிறோம்.
இத்திட்டம் இப்பகுதியில் உள்ள 13 பெட்ரோல் விற்பனை நிலையங்களில், காவல்துறை பாதுகாப்புடன் செயல்படுத்தப்படும். விபத்தை குறைப்பதற்கு இந்நடவடிக்கை உதவும். பொதுமக்கள் இதற்கு முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என்றார் அவர்.
நிகழ்ச்சியின்போது, திருச்செந்தூர் தாலுகா காவல் ஆய்வாளர் பாலாஜி, உதவி ஆய்வாளர்கள் மேரி ராணி, போக்குவரத்து உதவி ஆய்வாளர் கருப்பசாமி, பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர்கள் ஹரிகிருஷ்ணன், சுதர்சன், ஹெச்பிசிஎல் தரக்கட்டுப்பாட்டு அலுவலர் மோகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


ஆறுமுகனேரி,  காயல்பட்டினத்தில்...
ஆறுமுகனேரி, காயல்பட்டினம் பகுதிகளில் ஜூன் 1ஆம் தேதி முதல் தலைக்கவசம் இல்லாமல் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் வழங்கப்படாது என ஏற்கெனவே அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. 
இந்நிலையில் அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வெள்ளிக்கிழமை காலை 9 மணிமுதல் ஆறுமுகனேரி, காயல்பட்டினம் பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு தலைக்கவசத்துடன் வந்த 30 வாகன ஓட்டிகளுக்கு ஒரு லிலிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்பட்டது. 
நிகழ்ச்சியை, ஆறுமுகனேரி காவல் ஆய்வாளர் பத்திரகாளி, உதவி ஆய்வாளர் சுந்தரமூர்த்தி ஆகியோர் தொடங்கிவைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com