Enable Javscript for better performance
ரயில் பாதைக்காக விளைநிலங்களில் இருந்து அனுமதியின்றி சரள் மண்: 6 லாரிகள் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    ரயில் பாதைக்காக விளைநிலங்களில் இருந்து அனுமதியின்றி சரள் மண்: 6 லாரிகள் பறிமுதல்

    By DIN  |   Published on : 04th June 2019 09:24 AM  |   அ+அ அ-   |    |  

    புதியம்புத்தூர் அருகே புதிய ரயில்வே பாதைக்காக விளைநிலங்களில் சரள் மண் எடுக்கப்படுவதாக வந்த புகாரின்பேரில், ஓட்டப்பிடாரம் வருவாய்த் துறையினர் ஞாயிற்றுக்கிழமை 6 லாரிகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
    தூத்துக்குடி- அருப்புக்கோட்டை வழியில் புதிய ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் புதியம்புத்தூரை அடுத்த நயினார்புரம் பகுதியில் தூத்துக்குடி சாலையை கடப்பதற்கும், தூத்துக்குடி மதுரை நான்குவழிச் சாலையை கடப்பதற்கு வாலசமுத்திரம் பகுதியிலும் உயர்நிலை பாலம் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. மேம்பால பணிகளுக்காக வாலசமுத்திரம், சில்லாநத்தம் ஆகிய கிராமங்களில் இரவுநேரங்களில் அங்குள்ள விளைநிலங்களில் ஜேசிபி இயந்திரம் மூலம் சரள் மண் வெட்டி எடுக்கப்படுவதாக பொதுமக்கள் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திற்கும், ஓட்டப்பிடாரம் வருவாய்த் துறையினருக்கும் புகார் தெரிவித்து வருகின்றனர். 
    இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியளவில் சில்லாநத்தம் மற்றும் வாலசமுத்திரம் பகுதி காடுகளில் இருந்து சரள் மண் லாரிகளில் கொண்டுசெல்லப்படுவதாக ஓட்டப்பிடாரம் வருவாய்த் துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் மலர்தேவன், துணை வட்டாட்சியர் கண்ணன், கிராம நிர்வாக அலுவலர் பார்த்தசாரதி உள்ளிட்டோர் அங்கு சென்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். 
    அப்போது அவ்வழியாக வந்த 6 லாரிகளை மடக்கிப்பிடித்து சோதனையிட்டதில், அந்த லாரிகளில் எந்தவிதமான ஆவணமும் இல்லாமல், சரள் மண் கொண்டுசெல்வதை அறிந்தனர். இதையடுத்து, அந்த லாரிகளை ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு கொண்டுவந்த வருவாய்த் துறையினர், லாரிகள் குறித்தும், அவற்றின் உரிமையாளர்கள் குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
     

    kattana sevai