கோவில்பட்டி, கயத்தாறு பகுதிகளில் கனிமொழி எம்.பி. சுற்றுப் பயணம்
By DIN | Published On : 14th June 2019 06:48 AM | Last Updated : 14th June 2019 06:48 AM | அ+அ அ- |

கோவில்பட்டி, கயத்தாறு ஒன்றியப் பகுதிகளில், வாக்காளர்களுக்கு கனிமொழி எம்.பி. வியாழக்கிழமை நன்றி தெரிவித்தார்.
தூத்துக்குடி மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கனிமொழி, கோவில்பட்டி ஒன்றியம் துறையூர், சிவந்திப்பட்டி, கரிசல்குளம், பாண்டவர்மங்கலம், மந்தித்தோப்பு, நாலாட்டின்புத்தூர், முடுக்குமீண்டான்பட்டி, கயத்தாறு ஒன்றியம் தீத்தாம்பட்டி, அச்சங்குளம், குருவிநத்தம், காமநாயக்கன்பட்டி, வானரமுட்டி, கழுகுமலை, சி.ஆர். காலனி, கரடிகுளம், வேலாயுதபுரம், செட்டிக்குறிச்சி ஆகிய பகுதிகளுக்குச் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
அப்போது அவர் பேசுகையில், வாக்களித்த அனைவருக்கும் நன்றி. மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மாவட்ட ஆட்சியரிடம் நேரில் வலியுறுத்துவேன். மக்களவையிலும் தூத்துக்குடி மக்களின் குரலாக ஒலிப்பேன் என்றார்.
முன்னதாக, பாண்டவர்மங்கலத்தில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவர், செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்னை உள்ளது. இதற்கு நிரந்தரத் தீர்வு காண அரசு எதையும் செய்யவில்லை. திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல திட்டங்கள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன. விளாத்திகுளம் பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்னை தொடர்பாக ஆட்சியரிடம் மனு அளிக்கவுள்ளோம் என்றார் அவர்.
நிகழ்ச்சியின்போது, தூத்துக்குடி வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ., மாநிலக் குழு உறுப்பினர்கள் ஜெகன், ராதாகிருஷ்ணன், மாநில விவசாயத் தொழிலாளரணிச் செயலர் சுப்பிரமணியன், கழுகுமலை நகரச் செயலர் கிருஷ்ணகுமார், மாவட்டப் பிரதிநிதி செல்வகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.