தூத்துக்குடியில் நாளை இசைப்போட்டி
By DIN | Published On : 19th June 2019 07:00 AM | Last Updated : 19th June 2019 07:00 AM | அ+அ அ- |

தூத்துக்குடியில் (புதன்கிழமை) நடைபெறும் இசைப் போட்டியில் பங்கேற்றலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: உலக இசை தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி டூவிபுரம் 11 ஆவது தெருவில் செயல்படும் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் புதன்கிழமை (ஜூன் 19) காலை 10 மணியளவில் இசைப் போட்டிகள் நடைபெறுகிறது. 15 வயது முதல் 30 வயது வரையிலானவர்களுக்கு நான்கு பிரிவுகளில் நடத்தப்படும்.
தமிழிசை போட்டி, கிராமிய பாடல் போட்டி, முதன்மை கருவியிசைப் போட்டி (நாதஸ்வரம், வீணை, வயலின், புல்லாங்குழல், மாண்டலின், கோட்டுவாத்யம், சாக்ஸபோன், கிளாரிநெட் போன்றவை) , தாள கருவியிசைப் போட்டி (மிருதங்கம், தவில், கடம், கஞ்சிரா, மோர்சிங் போன்றவை) என்ற பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படும்.
போட்டிகளில் தமிழில் அமைந்த பாடல்கள் மட்டுமே பாடலாம். இசைக்கலாம். போட்டியாளர்கள் தங்களுக்கு தேவையான இசைக்கருவிகளை தாங்களே கொண்டு வரவேண்டும். போட்டியில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ.3000, இரண்டாம் பரிசு ரூ. 2000, மூன்றாம் பரிசு ரூ.1000 வழங்கப்படும்.
உலக இசை தினத்தை முன்னிட்டு 20 ஆம் தேதி நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 9487739296 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.