தொழில் முனைவோருக்கு மானியத்தில் கடனுதவி: விண்ணப்பிக்க அழைப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில் முனைவோர் மானியத்தில் ரூ. 30 லட்சம் கடனுதவி பெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில் முனைவோர் மானியத்தில் ரூ. 30 லட்சம் கடனுதவி பெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மேம்படும் வகையிலும், முதல் தலைமுறை தொழில் முனைவோர் நிறுவனங்களைத் தொடங்கவும் தமிழக அரசு புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தை (நீட்ஸ்) செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் பட்டம், பட்டயம் மற்றும் தொழிற்கல்வி பயின்ற முதல் தலைமுறை தொழில் முனைவோர் சுய தொழில் தொடங்கும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது. 
அதன்படி, பொது பிரிவினருக்கு 21 வயதுக்கு மேல் 35 வயதுக்குள் இருத்தல் வேண்டும். சிறப்பு பிரிவினர்களான மகளிர், ஆதி திராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு அதிகபட்ச வயது 45 ஆகும்.  இத்திட்டத்துக்கு ஆண்டு வருமான உச்ச வரம்பு ஏதும் இல்லை. பயானளிகள் மூன்று ஆண்டுகளுக்கு குறையாமல் தமிழகத்தில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். அனைத்து உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில்கள் தொடங்க 25 சதவீதம் அரசு மானியத்துடன் அதிகபட்சம் ரூ.30 லட்சம் வரை கடன் வழங்கப்படும். இத் திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சத்துக்கு மேல் அதிகபட்சம் ரூ. 5 கோடி வரையான திட்டங்களுக்கு கடன் பெறலாம்.  திட்ட மதிப்பீட்டில் பொதுப் பிரிவினர் 10 சதவீதமும், சிறப்பு பிரிவினர் 5 சதவீதமும் தங்களது பங்காக முதலீடு செய்ய வேண்டும். தவணை தவறாமல் கடனைத் திருப்பி செலுத்தும் தொழில் முனைவோர்களுக்கு கூடுதல் சலுகையாக 3 சதவீத பின்முனை வட்டி மானியமும் வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் w‌w‌w.‌m‌s‌m‌e‌o‌n‌l‌i‌n‌e.‌t‌n.‌g‌o‌v.‌i‌n/‌n‌e‌e‌d‌s  என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும். அவர்களது விண்ணப்பம் மாவட்ட தொழில் மையம் மூலம் இணையதளத்தில் சரிபார்க்கப்பட்டு நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர். மேலும், விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், புறவழிச்சாலை, தூத்துக்குடி என்ற முகவரியில் தொடர்பு  கொண்டு அறிந்து கொள்ளலாம். ஆர்வமுள்ள தொழில் முனைவோர் இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயன் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com