ஆறுமுகமங்கலம் ஆயிரத்தெண் விநாயகர் கோயிலில் வருஷாபிஷேகம்
By DIN | Published On : 22nd June 2019 06:36 AM | Last Updated : 22nd June 2019 06:36 AM | அ+அ அ- |

ஆறுமுகமங்கலம் அருள்மிகு ஆயிரத்தெண் விநாயகர் கோயிலில் வெள்ளிக்கிழமை வருஷாபிஷேகம் நடைபெற்றது.
இக்கோயில் வருஷாபிஷேக விழா வியாழக்கிழமை மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.தொடர்ந்து முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.
வெள்ளிக்கிழமை காலையில் இரண்டாவது கால யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து காலை 10 மணிக்கு விமான அபிஷேகம், மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா அபிஷேகம், வருஷாபிஷேகம் நடைபெற்றது.
நண்பகல் 12 மணிக்கு உச்சிகால தீபாராதனை, பிற்பகல் 12.30 மணிக்கு அருள்மிகு பஞ்சமுக விநாயகர் உள்மாட வீதியுலா ஆகியவை நடைபெற்றது. தொடர்ந்து விநாயகருக்கு 1008 தேங்காய் திருக்கண் சாத்தப்பட்டது. இதில், திருக்கைலாய பரம்பரை பெருங்குளம் செங்கோல் ஆதீனம் 103ஆவது குரு மகா சன்னிதானம் சிவப்பிரகாச சத்யஞான தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் கலந்துகொண்டு ஆசியுரை வழங்கினார்.
ஏற்பாடுகளை தேவஸ்தான செயல் அலுவலர் (பொ) கிருஷ்ணமூர்த்தி, பூஜா ஸ்தானீகர் விக்னேஷ்வர பட்டர் ஆகியோர் செய்திருந்தனர்.