2,731 பேருக்கு ஊட்டச்சத்து பெட்டகம்
By DIN | Published On : 24th June 2019 10:25 AM | Last Updated : 24th June 2019 10:25 AM | அ+அ அ- |

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 2,731 பேருக்கு தாய், சேய் நல ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் ரத்த சோகை நோயை தடுக்கவும், கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையின் எடையை அதிகரிக்கும் நோக்கத்தில் அம்மா தாய் சேய் நல ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தொடங்கி வைத்தார்.
அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு அம்மா தாய் சேய் நல ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. கர்ப்பிணி பெண்களுக்கு 3 மாதம் நிறைவில் ரூ. 2,000 மதிப்பில் ஒரு பெட்டகமும், 4 மாதம் நிறைவில் ரூ. 2,000 மதிப்பிலான ஒரு பெட்டகமும் வழங்கப்படுகிறது. தாய் சேய் நல பெட்டகத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு புரோ-பிளஸ், கர்ப்பிணி தாய்க்கான சத்து பவுடர் 1 கிலோ, இரும்பு சத்து திரவம் 200 மி.லி. 3 பாட்டில், விதை நீக்கப்பட்ட பேரீச்சம்பழம் 1 கிலோ, ஆவின் நெய் 500 மி.லி., ஆல்பெண்டசோல் குடற்புழு நீக்க மாத்திரை 3, கோப்பை -1, துண்டு -1 ஆகிய பொருள்களுடன் ஒரு கூடையும் வழங்கப்படும்.
இம்மாவட்டத்தில் இதுவரை 2,731 தாய்மார்களுக்கு அம்மா தாய்சேய் நல ஊட்டசத்து பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.