தோட்டக்கலை பயிர்களுக்கு ரூ. 20.92 கோடி மானியம் வழங்க இலக்கு: ஆட்சியர்

தூத்துக்குடி மாவட்டத்தில் நிகழாண்டில் தோட்டக்கலை பயிர்களுக்கு ரூ. 20.92 கோடி மானியம் வழங்க

தூத்துக்குடி மாவட்டத்தில் நிகழாண்டில் தோட்டக்கலை பயிர்களுக்கு ரூ. 20.92 கோடி மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், 100 சதவீத மானியத்தில் நுண்ணீர் பாசன கருவிகள் பெற்று விவசாயிகள் பயனடையலாம் எனவும் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் வாயிலாக பல திட்டங்கள் விவசாயிகளின் நலனுக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில், பிரதான திட்டமாக நுண்ணீர் பாசனத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  இந்தத் திட்டத்தின் மூலம் 2019-20-ம் ஆண்டிற்கான விண்ணப்பங்கள் விவசாயிகளிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. இத்திட்டத்தின் மூலம், சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் சொட்டுநீர் பாசனம் மற்றும் தெளிப்புநீர் பாசனக் கருவிகள் வழங்கப்பட உள்ளன.  
குறைந்தபட்சம் 0.40 ஏக்கர் முதல் 5 ஏக்கர் வரையுள்ள விவசாயிகள் இத்திட்டத்தில் பயன்பெறலாம். இதர விவாசயிகளுக்கு 75 சதவீத மானியத்தில் 12.5 ஏக்கர் வரை சொட்டுநீர் பாசனம் மற்றும் தெளிப்புநீர் பாசனக் கருவிகள் வழங்கப்பட உள்ளன. மேலும், இத்திட்டத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பைச் சார்ந்த விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். நிகழாண்டில், தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கு 3,600 ஹெக்டேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, ரூ. 20.92 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  
இத்திட்டத்தில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள் ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், கிராம அடங்கல், கணினி சிட்டா, நில வரைபடம், சிறு, குறு விவசாயிகளாக இருப்பின், அதற்கான வட்டாட்சியரிடம் இருந்து பெறப்பட்ட சான்று ஆகிய ஆவணங்களுடன் அருகேயுள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு தோட்டக்கலை துணை இயக்குநர் அலுவலக தொலைபேசி எண். 0461 -2340681 மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநர் தொலைபேசி எண் 90928 61549 ஆகியவற்றில் தொடர்புகொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com