குரும்பூர் அருகே இளைஞருக்கு வெட்டு: 3 பேர் கைது
By DIN | Published On : 04th March 2019 06:09 AM | Last Updated : 04th March 2019 06:09 AM | அ+அ அ- |

குரும்பூர் அருகே தகராறு செய்தவர்களை கண்டித்த இளைஞரை அரிவாளால் வெட்டியதாக 3 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
ஏரல் அருகே தேவராஜபுரத்தைச் சேர்ந்த அண்ணா கணேசன் மகன் சங்கரசுப்பு (26), சிவராமமங்கலம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த முருகன் மகன் ராமகிருஷ்ணன் என்ற சேகர்(24), மொட்டச்சிக்குடியிருப்பு முப்புடாதி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த பாலன் மகன் பாண்டி(24).
இவர்கள் மூவரும் சனிக்கிழமை ஒரே பைக்கில் திருச்செந்தூர் சென்றுவிட்டு ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனராம்.
குரும்பூர் அருகே உள்ள குரங்கன்தட்டு வழியாக சென்றபோது, கம்பியை வைத்து தரையில் உரசி சப்தம் ஏற்படுத்தினராம். இதை அங்கு நின்று கொண்டிருந்த அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சின்னத்துரை மகன் வேம்படிமுத்து (37) மற்றும் சிலர் அவர்களை மறித்து கண்டித்தனராம். இதையடுத்து அங்கிருந்து மூவரும் சென்றுவிட்டனர்.
பின்னர் இரவு 7.30 மணியளவில் திருச்செந்தூர் பம்ப்ஹவுஸ் அருகே உள்ள குளத்து மடையில் குளித்துவிட்டு மனைவியுடன் வீட்டுக்குச் சென்ற வேம்படிமுத்துவை, அவர்கள் 3 பேரும் அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதுகுறித்து வழக்குப் பதிந்த குரும்பூர் போலீஸார் வேம்படிமுத்துவை வெட்டியதாக சங்கரசுப்பு, ராமகிருஷ்ணன், பாண்டி ஆகிய மூவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.