வேட்புமனுத் தாக்கல் இன்று தொடக்கம்:  விதிமுறைகளை முழுமையாக பின்பற்ற அறிவுரை

மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் செவ்வாய்க்கிழமை (மார்ச் 19) தொடங்குகிறது.

மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் செவ்வாய்க்கிழமை (மார்ச் 19) தொடங்குகிறது. தூத்துக்குடியில் மனு தாக்கலின்போது விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
  தேர்தல் ஆணைய அறிவிப்பு படி தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் செவ்வாய்க்கிழமை (மார்ச் 19) முதல் 26 ஆம் தேதி வரை (விடுமுறை நாள்கள் நீங்கலாக) தினமும் முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனுவை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான ஆட்சியர் ,  முதன்மை உதவித் தேர்தல் அலுவலர் சுகுமார் ஆகியோரிடம் மனுவை தாக்கல் செய்யலாம்.
   மனு தாக்கல் செய்யும்போது மாவட்ட ஆட்சியரின்  அறைக்குள் வேட்பாளருடன் 4 நபர்கள் (மொத்தம் 5 நபர்கள்) மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.  ஒவ்வொரு வேட்பாளரும் ரூ.25,000  வைப்புத் தொகை செலுத்த வேண்டும்.  வேட்பாளர் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினராக இருந்தால் வைப்புத் தொகைரூ.12,500 மற்றும் உரிய சாதி சான்றிதழ் கண்டிப்பாக தாக்கல் செய்ய வேண்டும்.
   வேட்பாளர்கள் வேட்புமனுவுடன் பிரமாண பத்திரம் (அபிடவிட்) தாக்கல் செய்ய வேண்டும். மேலும், அபிடவிட் ரூ.20 மதிப்புள்ள ஸ்டாம்ப் பேப்பரில் இருக்க வேண்டும். அதில் அனைத்து விவரங்களும் கண்டிப்பாக பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும். இதற்கான படிவங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக தேர்தல் பிரிவில் இலவசமாக கிடைக்கும்.
 வேட்புமனுத் தாக்கல் செய்பவர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும் போது தேர்தல் நடத்தும் அலுவலர் முன்பு அரசியல் அமைப்பு சட்டத்தின்படி நடந்து கொள்ள உறுதிமொழியை கண்டிப்பாக எடுக்க வேண்டும்.  வேட்பாளர்கள் அனைவரும் தாங்கள் வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு முன்தினம் ஏதேனும் ஒரு வங்கியில் தேர்தலுக்கான தனியாக கணக்கு ஒன்றை தொடங்கி , அதன் நகலுடன் வேட்புமனுவைத் தாக்கல் செய்ய வேண்டும். 
 தேர்தல் தொடர்பான அனைத்து வரவு-செலவு கணக்கு விவரங்களை கண்டிப்பாக அந்த வங்கிக் கணக்கு மூலமாகதான் செய்ய  வேண்டும். தேர்தலுக்காக புதிதாக தொடங்கப்பட்ட வங்கிக் கணக்கை வேட்பாளர்கள் தங்கள் பெயரிலோ அல்லது தங்களால் நியமனம் செய்யப்பட உள்ள தேர்தல் முகவரை கூட்டாக சேர்த்தோ தொடங்கலாம்.
வேட்புமனுத் தாக்கல் செய்யும்போது, வேட்புமனுத் தாக்கல் செய்யும் இடத்துக்கு 3 வாகனங்களை தவிர மற்ற வாகனங்கள் 100 மீட்டர் தொலைவில் நிறுத்தி வைக்கப்படும். மேலும், வாகனங்கள் வேட்புமனுத் தாக்கல் செய்யும் இடத்துக்கு வந்து செல்லும்போது விடியோ எடுக்கப்பட்டு பதிவு செய்யப்படும்.
  எனவே, வேட்புமனுத் தாக்கல் செய்யும் பணியில் அனைத்து வேட்பாளர்களும் விதிமுறைகளை முழுமையாக பின்பற்றி மாவட்ட நிர்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.
 வேட்புமனுத் தாக்கல் செவ்வாய்க்கிழமை(மார்ச் 19) தொடங்குவதை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கூடுதல் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com