வேட்புமனுத் தாக்கல் விதிமுறைகள்அரசியல் கட்சியினருடன் ஆலோசனை

தூத்துக்குடி மாவட்டத்தில் வேட்பு மனுத் தாக்கலின்போது அரசியல் கட்சியினர் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் வேட்பு மனுத் தாக்கலின்போது அரசியல் கட்சியினர் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் மு. வீரப்பன் திங்கள்கிழமை ஆலோசனை மேற்கொண்டார்.
 மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில்,  தமிழகத்தில் வேட்பு மனுத் தாக்கல் செவ்வாய்க்கிழமை (மார்ச் 19) தொடங்குகிறது. தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிட விரும்புவோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான சந்தீப் நந்தூரியிடம் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
   இந்நிலையில், வேட்பு மனுத் தாக்கலின்போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசியல் கட்சி நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் மு. வீரப்பன் தலைமை வகித்தார்.  உதவி ஆட்சியர் (பயிற்சி) அனு முன்னிலை வகித்தார்.  இதில், மாவட்டத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
   கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர்  பேசியது;   தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான ஆட்சியர் சந்தீப் நந்தூரி முன்பு மனு தாக்கல் செய்ய வேண்டும். அல்லது அவரால் நியமனம் செய்யப்பட்ட முதன்மை உதவித் தேர்தல் அலுவலரான மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பொறுப்பு வகிக்கும் சுகுமாரிடம் மனு தாக்கல் செய்ய வேண்டும். 
 அங்கீகரிக்கப்பட்ட தேசிய அல்லது மாநில அரசியல் கட்சி மற்றும் பதிவு செய்யப்பட்ட கட்சியின் சார்பில்,  நிறுத்தப்படும் வேட்பாளர்கள் தங்களை வேட்பாளர்களாக நியமனம் செய்த கட்சியிடம் இருந்து பெற்ற படிவங்களின் அசலை தாக்கல் செய்ய வேண்டும்.
 அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் வேட்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் வாக்காளராக பதிவு செய்யப்பட்ட ஒருநபர் முன்மொழிய வேண்டும்.  மற்ற வேட்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் வாக்காளராக பதிவு செய்யப்பட்ட தலா 10 நபர்கள் முன்மொழிய வேண்டும் என்றார் அவர்.
 கூட்டத்தில், பங்கேற்ற அரசியல் கட்சி நிர்வாகிகள் பலர் தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக ஒருதலைபட்சமாக வழக்குகள் பதிவு செய்யப்படுவதாக புகார் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com