Enable Javscript for better performance
தமிழகத்திற்கு வேகமான முன்னேற்றம் தேவை: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்- Dinamani

சுடச்சுட

    

    தமிழகத்திற்கு வேகமான முன்னேற்றம் தேவை: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

    By DIN  |   Published on : 28th March 2019 06:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகத்திற்கு வேகமான முன்னேற்றம் தேவை; அதை பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் வழங்குவார்கள் என்றார் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல். 
    தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் தேர்தல் அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
    தமிழக அரசியல் வரலாற்றில் இல்லாத கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. ஊழல் நிறைந்த காங்கிரஸ், திமுக கூட்டணியை வென்றெடுப்போம். தமிழகத்திற்கு வேகமான முன்னேற்றம் தேவை. அதை பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் வழங்குவார்கள்.
    திமுக, காங்கிரஸ் கட்சிகள் வாரிசு அரசியலை ஊக்குவிக்கின்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ. 72 ஆயிரம் வழங்குவதாக பொய்யான வாக்குறுதிகளை அளித்து வருகிறார். விவசாயக் கடன் ரத்துசெய்யப்படும் என பஞ்சாபில் தேர்தல் வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் கட்சி, தற்போது வரை விவசாய கடனை ரத்துசெய்யவில்லை. இதே நிலை மத்திய பிரதேசம், ராஜஸ்தானிலும் நீடிக்கிறது. எனவே, இதுபோன்ற பொய்யான வாக்குறுதிகளை மக்கள் நம்ப மாட்டார்கள். ஆனால், பாஜக விவசாயிகளுக்கு மானிய விலையில் உரம், இலவச மின்சாரம் உள்ளிட்ட சலுகைகளை வழங்கி வருகிறது. தமிழகத்தில் அதிமுக ஆட்சி விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழகம் மற்றும் புதுவையில் தேசிய ஜனநாயக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றார் அவர்.
    பேட்டியின் போது, தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு, முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர் ஜான்பாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai