மக்கள் நீதி மய்யத்துக்கு வாக்களித்தால் தமிழகம் புதிய திசையை நோக்கி திரும்பும் என்றார் அக்கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன்.
ஓட்டப்பிடாரம் பேரவைத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கூட்டணி கட்சியான வளரும் தமிழகம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் காந்தியை ஆதரித்து, புதுக்கோட்டையில் சனிக்கிழமை அவர் பிரசாரம் மேற்கொண்டபோது பேசியது: பல கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்கள். அந்தப் பணம் அவர்களுடையது அல்ல. அதை வாங்கி ஏமாற வேண்டாம் என்பது எனது முதல் அறிவுரை. அப்படி செய்தால் நம் தலையில் மண்ணை வாரி போட்டுக் கொள்வது போல் ஆகிவிடும். 3 அடி அளவுக்கு மண் எடுக்க அனுமதி பெற்றுக் கொண்டு 20 அடி வரை மண் எடுத்து நீர்நிலைகளை சீரழித்து விட்டனர்.
குடத்துக்கு ரூ.10 கொடுத்து தண்ணீர் வாங்கும் நிலை உள்ளது.
தலைவர்களை தேடாதீர்கள். வாக்காளர்கள்தான் தலைவர்கள். புதிதாக வந்திருக்கும் இளைய தலைமுறையினர் மக்கள் நீதிமய்யத்துக்கு வாக்களிப்பது மட்டுமன்றி, குழம்பி உள்ள பெரியோர்களை தெளிவுபடுத்தி வாக்களிக்கச் செய்து காட்டுங்கள். அப்படிச் செய்தால் தமிழகம் புதிய திசையை நோக்கி திரும்பும்.
தமிழகத்தின் எதிர்காலத்தை நினைவில் கொண்டு வாக்களித்தால் நாளை நமதே என்றார் அவர்.
தொடர்ந்து, அந்தோணியார்புரம், ஓட்டப்பிடாரம், புதியம்புத்தூர் ஆகிய பகுதிகளில் அவர் பிரசாரம் மேற்கொண்டார்.